

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் ப.சிதம்பரத்தின் பங்கு என்னவென்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
2006-ம் ஆண்டு ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தை பொருளாதார விவகார அமைச்சரவைக் குழு முன் கொண்டு வராமல் அன்னிய முதலீட்டு வாரிய அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து சுப்பிரமணியன் சுவாமி ஆதாரங்களை வழங்க 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.ஸ்.கேஹர் முன் இன்று நேரில் ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, ரூ.600 கோடிக்கும் அதிகமான எந்த ஒரு ஒப்பந்தமாயினும் அனுமதி வழங்குவதற்கு முன் பொருளாதார விவகார அமைச்சரவைக் குழு பார்வைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் ரூ.3,500 கோடி பெறுமானது என்று மேலும் கூறினார் சுவாமி.
இதற்கு நீதிபதி கேஹர், “இந்த ஒப்பந்தம் ரூ.600 கோடிக்கும் அதிகமானது என்பது அவருக்குத் தெரியுமா? இதனை பொருளாதார விவகார அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுப்பிரமணியன் சுவாமி, “அவர் (சிதம்பரம்) அப்போது நிதியமைச்சராக இருந்தார். அன்னிய முதலீட்டு வாரியம் முன் இது முன்மொழியப்பட்டுள்ளது, எனவே அவருக்கு இது பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியம்” என்றார்.
“அவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமுள்ளது என்பது ஒருபுறம், அவர் இந்த விஷயம் தெரியும் என்பதற்கான உங்கள் தரப்பு ஆதாரம் என்ன? அவர் இது பற்றி தெரிந்திருக்கிறார் என்பது பற்றி உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? என்று தலைமை நீதிபதி கேஹர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதில் அளிக்கையில், “இந்த விஷயம் தெரியாது என்று எந்த ஒரு அமைச்சரும் கோர முடியாது. இது சிபிஐ விசாரணையில் இருந்த வழக்கு, அவர்கள் விசாரணை நடத்தி சீலிட்ட உறையில் அறிக்கையை 2015-ல் இதே கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர். இப்போது சிபிஐ இதில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்” என்றார்.
இதற்கு நீதிபதி கேஹர், “நீங்கள் உங்கள் புகாருக்கான தகுந்த பருமையான ஆதாரங்களை அளிக்க வேண்டும். ஒருவர் எவ்வளவு பெரியமனிதராக இருந்தாலும் நாங்கள் நோட்டீஸ் அனுப்புவோம், ஆனால் நீங்கள் உங்கள் புகாருக்கு தகுந்த ஆதாரங்களை அளியுங்கள்” என்றார்.
இதனையடுத்து சுப்பிரமணியன் சுவாமி நிரூபிக்க 2 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.