

அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி.) இந்தியாவை உறுப்பினராக்க அமெரிக்கா தன் ஆதரவை மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க தேசிய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பெஞ்சமின் ரோட்ஸ் கூறும்போது, “சமூகப் பயன்பாட்டுக்கான அணு ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற பாதையில் இந்தியா பயணித்ததையடுத்தும், அணுப்பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் தனது உறவை கட்டமைக்க எடுத்துக் கொண்ட கால அவகாசம் ஆகியவற்றைப் பார்க்கும் போதும், இந்தியாவை ஆதரிப்பது குறித்து நாங்கள் நல்ல நிலையிலிருந்துதான் முடிவெடுத்துள்ளோம்.
ஆனாலும் மற்ற நாடுகளின் கவலைகளையும் நாங்கள் கவனமாக பரிசீலிக்கிறோம். இருப்பினும் ஒரு பரந்துபட்ட சூழலைக் கருத்தில் கொண்டு இந்தியாவுடன் இத்தகைய அணுகுமுறையைக் கடைபிடிப்பதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அணுபாதுகாப்பு விவகாரத்தில் இந்த அணுகுமுறை நிச்சயம் பலனளிக்கும் என்ற அடிப்படையிலேயே இந்திய உறுப்பினர் தகுதியை நாங்கள் பரிசீலிக்கிறோம்” என்றார்.
மோடி-ஒபாமா சந்திப்பு
அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார். இருதலைவர்களும் 7-வது முறையாக சந்திப்பது பல விவகாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வெள்ளை மாளிகை இந்தச் சந்திப்பு குறித்து கூறும்போது, “பருவநிலை மாற்றம் மற்றும் சுத்தமான எரிசக்தி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றம் எத்தகையது என்பதை இருவரும் விவாதிக்கவுள்ளனர். மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி முன்னுரிமைகள் குறித்தும் இருவரும் விவாதிக்கவுள்ளனர். இருவரும் இரண்டு நீண்ட நேர சந்திப்பில் உரையாடுவார்கள்” என்று கூறியுள்ளது.
பாதுகாப்பு உறவுகள்:
இந்தியாவில் நிலவும் ‘கடினமான அரசியல் சூழ்நிலைகளை’கடந்தும் பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் மோடி தலைமை அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
“இந்தியா தனது நலன்களைப் பாதுகாக்கும் திறனை இந்தியா வளர்த்துக் கொண்டுள்ளதாக அடையாளம் காணப்படுகிறது. தங்களது உடனடியான பகுதிகளில் மட்டுமல்ல ஆசிய-பசிபிக் பகுதி முழுவதிலுமே, குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் இந்தியா தன் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன்களை வளர்த்துக் கொண்டிருப்பதாக அடையாளம் காணப்படுகிறது. அதனால் அமெரிக்கா தன் சொந்த விருப்பம் காரணமாக இந்தியாவுக்கு அத்தகைய திறனை வளர்த்துக் கொள்ள உதவ முன்வருகிறது.
இந்தியா எங்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறதோ இல்லையோ இந்தியா தங்கள் நலன்களை அப்பகுதியில் பாதுகாப்பு உறுதி செய்து கொள்வதற்கு அமெரிக்கா உதவி செய்ய கடமைப்பட்டுள்ளது.” என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.