

காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவை அவசரக் கூட்டம் இன்று கூடுகிறது.
கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்ட அமைச்சர் ஜெயசந்திரா உள்ளிட் டோருடன் முதல்வர் சித்தராமையா கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை நேற்று சந்தித்தார். அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதற்காக சிறப்பு சட்டப் பேரவை மற்றும் சட்டமேலவை கூட்டத்தைக் கூட்ட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து சிறப்பு சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவை அவசரக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. இதில் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.