

பாட்னாவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த பொதுக் கூட்ட மைதானத்தில் குண்டுகள் வெடித்ததால் பதற்றம் நிலவியது.
பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நரேந்திர மோடி இன்று வருவதற்கு முன்பு, சக்தி குறைந்த இரண்டு குண்டுகள் வெடித்ததாகவும், அதனால் அங்கு கூடியிருந்த மக்கள் சிதறி ஓடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காந்தி மைதானத்தில் கூட்டத்தின் இடையே வெடிச்சத்தமும் புகையும் கிளம்பியதால் மக்கள் பீதியடைந்தனர். எனினும், இந்தச் சம்பவத்தில் பலருக்குக் காயம் ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பாட்னா ரயில் நிலையத்தில் இன்று காலை நாட்டு வெடிகுண்டு வெடித்தில் ஒருவர் காயமடைந்தார். பாட்னாவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் செயலிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்தது.
கடைசியாகக் கிடைத்தத் தகவலின்படி, பலத்த பாதுகாப்புக்கிடையே மோடியின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்று வருகிறது.