முதல்வன் பாணியில் முதல்வராகிறார் கேஜ்ரிவால்?

முதல்வன் பாணியில் முதல்வராகிறார் கேஜ்ரிவால்?
Updated on
1 min read

’முதல்வன்’ திரைப்பட பாணியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் டெல்லி முதல்வ ராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அவர் பொது மக்களிடம் கருத்து கேட்டு எழுதிய கடிதத்துக்கு வெள்ளிக்கிழமை வரை ஆறு லட்சம் பதில்கள் குவிந்துள்ளன.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியினர் 'தி இந்து' நாளிதழிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைப்பது ’நித்திய கண்டம் பூரண ஆயுசு’ போன்றதுதான். ஒருவேளை அவ்வாறு ஆட்சி அமைத்தால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை கண்டிப்பாக ஆபத்து இருக்காது.

எனவே, ‘நாயக்’ (முதல்வன் படத்தின் இந்திப் பதிப்பு) திரைப்படத்தில் நாயகன் ஒரு நாள் முதல்வரானது போல், அர்விந்த் கேஜ்ரிவால் ஆறு மாதங்களுக்கு முதல்வராகலாம். இதில், ’நாயக்’ நாயகன் போல், அவர் டெல்லிவாசிகளுக்கு அதிரடி யாக பல நல்ல திட்டங்களை அமல்படுத்தலாம். அதன் பின்னர் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றாலும் வாக்காளர்களின் நிரந்தர ஆதரவைப் பெறுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றனர்.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா வேண்டாமா என பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஆம் ஆத்மி கட்சி சார்பில் எழுதிய கடிதங்களுக்கு பதில்கள் குவியத் துவங்கி உள்ளன.

இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது, இதுவரை வந்திருக்கும் சுமார் ஆறு லட்சம் கடிதங்களில், பெரும்பாலானவை கேஜ்ரிவால் முதல்வராக வேண்டும் என கூறியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதேபோல், வெற்றி பெற்றுள்ள 28 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுபற்றிய இறுதி முடிவை அர்விந்த் கேஜ்ரிவால் வரும் திங்கள்கிழமை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஏபிபி நியூஸ் மற்றும் நீல்சன் நடத்திய கருத்து கணிப்பு வெள்ளிக்கிழமை வெளி யிடப்பட்டது. இதில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வேண்டும் என 80 சதவிகிதம் பேரும் கூடாது என 19 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.

மறுதேர்தல் நடத்தலாமா என்ற கேள்விக்கு 64 சதவிகிதம் பேர் வேண்டாம் என்றும் 33 சதவிகிதம் பேர் வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மறு தேர்தல் நடத்தினால் மீண்டும் கேஜ்ரிவாலுக்கு வாக்களிப்பதாக 64 சதவிகிதம் பேரும், அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என 28 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 8-ல் வெளியானது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய அரசு அமைய தாம் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரவோ, பெறவோ போவதில்லை எனக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in