ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக வழக்கு: பீட்டா அமைப்பு தீவிர ஆலோசனை

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக வழக்கு: பீட்டா அமைப்பு தீவிர ஆலோசனை
Updated on
1 min read

ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாலா போட்டிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-ல் திருத்தம் கொண்டு வந்து தமிழக அரசு கடந்த 21-ம் தேதி அவசர சட்டம் பிறப்பித்தது. இச்சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த 23-ம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் நிரந்தர சட்ட வடிவம் பெற்றது. தமிழக அரசின் புதிய சட்டத்துக்கு எதிராக கம்பாசன் அன்லிமிடெட் பிளஸ் ஆக்்ஷன் (கியூபா), பெடரேஷன் ஆப் இண்டியன் அனிமல் புரொடக்்ஷன் ஆர்கனைசேஷன்(எப்ஐஏபிஓ), அனிமல் ஈக்வாலிடி ஆகிய தொண்டு அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் தடை விதிக்கும்படி வாதிடப்பட்டது.

கடந்த மாதம் 31-ம் தேதி இம்மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால், தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

இத்தகைய சட்டம் கொண்டு வருவதற்கான அவசியம் குறித்து தமிழக அரசு, 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்திலும் கம்பாலா போட்டிகளை நடத்தும் வகையில் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் கருத்து தெரிவித்துள்ள ‘பீட்டா இந்தியா’ அமைப்பின் கால்நடைகள் பிரிவு இயக்குநர் மணிலால் வலியதே, ‘ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாலா தொடர்பான சட்டங்களை எதிர்த்து ஒன்றாக வழக்கு தொடர்வதா அல்லது தனித்தனியாக வழக்கு தொடர்வதா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

இன்னும் ஓரிரு தினங்களில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வோம்’ என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in