ஓரினச் சேர்க்கை சட்டவிரோதம் அல்ல: சாத்தியக் கூறுகளை ஆராய்கிறது அரசு

ஓரினச் சேர்க்கை சட்டவிரோதம் அல்ல: சாத்தியக் கூறுகளை ஆராய்கிறது அரசு
Updated on
1 min read

ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என அறிவிக்க, அனைத்து சாத்தியக் கூறுகளையும் மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

இதனிடையே, ஓரினச் சேர்க்கை சட்டவிரோத குற்றம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கை தொடர்பாக நேற்று (புதன்கிழமை) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாயா அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

12 ஆண்டுகளாக நடந்த வழக்கில், ஓரினச் சேர்க்கை சட்டவிரோத குற்றம், இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வரை வழங்க சட்டத்தில் வழி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு தங்கள் வாழ்வுரிமையை பாதிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்த ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகும் போராட்டம் தொடரும் என்று கூறினார்.

சோனியா ஆதரவு:

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுதலை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறும் சட்டப்பிரிவு 377-ஐ டெல்லி உயர் நீதிமன்றம் நீக்கி வெளியிட்ட தீர்ப்பை அவர் வரவேற்றுள்ளார்.

கபில் சிபல் கருத்து:

மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என அறிவிக்க அனைத்து சாத்தியக் கூறுகளையும் அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், பரஸ்பரம் சம்மதத்துடன் 2 வளர்ந்த நபர்களிடையே நடைபெறும் உறவை சட்டப்பூர்வமாக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in