Last Updated : 01 May, 2015 03:12 PM

 

Published : 01 May 2015 03:12 PM
Last Updated : 01 May 2015 03:12 PM

மதச் சுதந்திரம்: அமெரிக்கா அறிக்கைக்கு இந்தியா கண்டனம்

கடந்த 2014 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், இந்தியாவில் மத ரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

அந்த அறிக்கையில், "2014 தேர்தலுக்குப் பின்னர் இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான அவதூறு விமர்சனங்கள், வன்முறைத் தாக்குதல்கள், ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் தலைமையிலான கட்டாய மதமாற்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இவை ஆளும பாஜக அரசியல்வாதிகள் ஆதரவுடன் நடக்கிறன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான சகிப்புத்தன்மை குறைந்து வருவது தொடர்பாக அதிபர் ஒபாமா இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அறிக்கையில், 5 பக்கங்கள் இந்தியாவைப் பற்றி இடம் பெற்றுள்ளது.

இதுதவிர, கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, மத வன்முறைகளால் பிரிந்து கிடக்காதவரை இந்தியாவின் வெற்றி நீளும் என பேசியதையும், கடந்த பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் பேசியபோது இந்தியாவின் மத சகிப்புத்தன்மை குறித்து பேசியதையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாள விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, "அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான ஆணையம், இந்திய மதச் சுதந்திரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை நம் கவனத்துக்கு வந்துள்ளது. கடந்த 30-ம் தேதி (ஏப்ரல் 30-ல்) அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை ஆராய்ந்தபோது, இந்தியா மீதான் குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாது, இந்திய சமூகம், அரசியல் சாசனம் பற்றி தெளிவான புரிதல் இல்லாமல் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை மத்திய அரசு கண்டு கொள்வதாக இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x