இஷ்ரத் ஜஹான் வழக்கு ஆவணங்கள் மாயமான விவகாரம்: எஃப்.ஐ.ஆர். பதிவு

இஷ்ரத் ஜஹான் வழக்கு ஆவணங்கள் மாயமான விவகாரம்: எஃப்.ஐ.ஆர். பதிவு
Updated on
1 min read

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகம் புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே இஷ்ரத் ஜகான் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்றும் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய திட்டமிட்டனர் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் போலியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனிடையே, இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் மத்திய உள் துறை அமைச்சகத்தின் பராமரிப்பிலிருந்து மாயமாகின.

ஆவணங்கள் மாயமானது தொடர்பாக, உள் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பி.கே.பிரசாத் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை பாஜக அரசு அமைத்தது.

இந்த விசாரணை ஆணையம் அப்போதைய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை உட்பட பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற 11 அதிகாரிகளை விசாரித்தது.

கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆவணங்கள் தெரிந்தோ, தெரியாமலோ நீக்கப்பட்டு உள்ளது அல்லது காணாமல் போனது என நபர் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தில் இருந்து காணாமல் போன 5 முக்கிய ஆவணங்களில் ஒரு ஆவணத்தை மட்டும் கண்டுபிடித்து உள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில் உள் துறை அமைச்சகத்தின் சார்புச் செயலாளர், இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக டெல்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையித்தில் புகார் பதிவு செய்துள்ளார்.

இந்த ஆவணங்கள் ஏன் காணாமல் போயின. எந்த சூழ்நிலையில், எப்படி காணாமல் போயின என்பது குறித்து விசாரிக்கும்படி அந்தப் புகாரில் கோரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in