

பிரதமர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கடிதம் மூலம் தெரிவித்த காந்தியவாதி அன்னா ஹசாரே, தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் தலைமை ஆட்சியின் ஊழல்களுக்கு எதிராக நாடுமுழுதும் போராட்டம் நடத்தப்பட்ட பிற்பாடு, நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற இந்தியாவாக மாற்றுவோம் என்று உறுதி மொழி கொடுத்தீர்கள், மக்கள் இதனை நம்பி உங்களை அரியணையில் ஏற்றியுள்ளனர். ஆனால் முந்தைய அரசுக்கும், உங்கள் அரசுக்கும் கண்ணுக்கு தெரிந்த வகையில் வித்தியாசம் எதுவும் இல்லை. இப்போது கூட வேலை நடக்க வேண்டுமெனில் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையே உள்ளது.
விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை. அயல்நாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் ரூ.15 லட்சம் வைக்கப்படும் என்று கூறினீர்கள், ஆனால் இதுவரை ரூ.15 கூட வரவில்லை.
அதிகாரம் உங்கள் கையில் உள்ளது. அதிகாரம் என்பது ஒருவகையான போதை என்றே தெரிகிறது” என்று கூறியதோடு, ஊழலுக்கு எதிராக இன்னொரு போராட்டம் நடத்துவதைத் தவிர தன்னை போன்ற சமூக ஆர்வலர்களுக்கு வேறு பணியில்லை என்பதையும் கடிதத்தில் சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார் அன்னா ஹசாரே.
மேலும், இதுபோன்ற பல கடிதங்களை பிரதமர் மோடிக்கு எழுதியும் இதுவரை எந்த பதிலும் அவரிடமிருந்து தனக்கு கிடைத்ததில்லை என்பதையும் இதே கடிதத்தில் சுட்டிக்காட்டிய அன்னா ஹசாரே, “முன்னாள் பிரதமர்களில் நரசிம்ம ராவ் எப்போதாவது சில விவகாரங்கள் குறித்து என்னுடன் தொலைபேசியில் உரையாடியதுண்டு, வாஜ்பாய் எப்போது புனே வந்தாலும் என்னை சந்திக்காமல் சென்றதில்லை.
மன்மோகன் சிங்கின் அரசுக்கு எதிரான கடும் விமர்சனங்களை வைத்தவன் நான், ஊழலுக்கு எதிராக அவரது ஆட்சியில்தான் இயக்கத்தை வலுப்படுத்தினேன், ஆனால் அவர் எனது கடிதங்கள் அனைத்துக்கும் பதில் அளித்துள்ளார்.
நீங்கள் அனைத்தையும் மறந்திருக்கலாம். அதனால்தான் உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டி இக்கடிதத்தை எழுதியுள்ளேன்”
இவ்வாறு அன்னா ஹசாரே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.