2ஜி வழக்கில் சிபிஐ நிலைப்பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

2ஜி வழக்கில் சிபிஐ நிலைப்பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
Updated on
1 min read

2ஜி வழக்கில் சிபிஐ அமைப்பும், சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் நிலைப்பாடும் இன்று உச்ச நீதிமன்றத்தின் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, அந்த அமைப்பின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு 2ஜி வழக்கில் தலையிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'சின்ஹாவின் நிலைப்பாட்டை நீதிமன்றம் ஏற்குமானால் 2ஜி வழக்கு வலுவிழக்கும்' என்றார்.

அப்போது நீதிமன்றத்தில் குழுமியிருந்த சிபிஐ அதிகாரிகள் அனைவரையும் வெளியாறுமாறு நீதிபதி தெரிவித்தார். 'இங்கு காத்திருப்பதைவிட உங்கள் அலுவலகத்துக்குச் சென்று அலுவல்களை செய்யுங்கள்' என்றார்.

அதேபோல், ரஞ்சித் சின்ஹா மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து சிபிஐ துணை இயக்குநர் அசோக் திவாரி பேசியபோதுm, 'நீங்கள் ரஞ்சித் சின்ஹாவின் ஏஜென்டுபோல் நடந்து கொள்ள வேண்டாம்' என்று நீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்தது.

முன்னதாக, நேற்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜரான சின்ஹா, தனது வீட்டு வருகைப் பதிவேடு காணாமல்போனது தொடர்பாக சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) ரஞ்சித் சின்ஹா குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வேணுகோபால், "சின்ஹாவுக்கு அப்படி சந்தேகம் ஏதும் இருந்தால் அதற்கான ஆதாரத்தை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்க வேண்டும்" என்றார்.

பிரசாந்த் பூஷனும், சிபிஐ இயக்குநர் கூறுவதுபோல் அந்த அமைப்பின் எந்த ஒரு அதிகாரியையும் நான் சந்திக்கவில்லை, யாரிடமும் எந்த ஆவணமும் பெறவில்லை என கூறினார்.

சிபிஐ இயக்குநர், 2ஜி வழக்கு மற்றும் நிலக்கரி ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டோரை சந்தித்துப் பேசியுள்ளார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இதனையடுத்து, சிபிஐ இயக்குநர் மீது விசாரணை தேவை என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தகக்து.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in