

காஷ்மீர் மாநிலம், லடாக் மாவட் டத்தில் பான்காங் ஏரியின் இந்தியப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் படகில் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது.
பான்காங் ஏரியில் தற்போது 90 கி.மீ. பகுதி சீனா வசமும் 45 கி.மீ. பகுதி இந்தியா வசமும் உள்ளது. இந்த ஏரியின் இந்தியப் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவி வருகிறது.
1962 இந்திய- சீன போரின் போது பான்காங் ஏரியின் பெரும் பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. மேலும் 1999-ம் ஆண்டு கார்கில் போரின்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போர் நடைபெற்று கொண் டிருந்தபோது பான்காங் ஏரியை ஒட்டி சீன ராணுவம் சாலை அமைத்தது.
போர் பதற்றம் நிறைந்த இந்த ஏரியில் இந்திய, சீன ராணுவங்கள் படகுகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. சீன ராணுவத்தின் சார்பில் 7 பேர் அமரக்கூடிய அதிவேக படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்திய ராணுவத்தின் படகுகள் சீனாவுக்கு இணையாக இல்லை. இதைத் தொடர்ந்து 15 பேர் அமரும் வகையில் அமெரிக்கா விடமிருந்து அதிநவீன படகுகளை இந்திய ராணுவம் வாங்கியது.
திடீர் ஊடுருவல்
இந்நிலையில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் பான்காங் ஏரியின் இந்தியப் பகுதியில் படகுகளில் அத்துமீறி நுழைந்துள்ளனர். ஏரி கரையோரம் உள்ள சாலையின் வழியாகவும் முன்னேறியுள்ளனர்.
இதையறிந்த இந்திய ராணு வத்தின் திபெத் எல்லை பாதுகாப் புப் படையினர் விரைந்து செயல்பட்டு சீன வீரர்களை தடுத்து நிறுத்தினர். அதற்குமேல் சீன ராணுவ படகுகள் ஓர் அங்குலம்கூட முன்னேறவிடாமல் இந்திய ராணுவ வீரர்கள் தடுப்பணையாக நின்றனர். வேறுவழியின்றி சீன ராணுவம் வாபஸ் பெறப்பட்டது.