

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய மத்திய பாதுகாப்பு படையுடன் மத்திய பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணியினர் நேற்று கோரிக்கை விடுத்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவினர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த இரு அணியினரும் ஏப்ரல் 12-ல் நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்முறையாக நேரடியாக மோதுகின்றனர். இதில் வி.கே.சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி. தினகரனின் வெற்றிக்காக பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும், மாநில அரசின் நிர்வாகம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் ஓபிஎஸ் அணியினர் புகார் கூறியுள்ளனர். இதை தேர்தல் ஆணையத்திடம் நேரில் தெரிவிக்க வி.மைத்ரேயன் எம்.பி. தலைமையில் ஒரு குழு நேற்று டெல்லி வந்தது. இதில் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் அளித்த மனுவில் ஆர்.நகர் தேர்தலுக்கு மத்திய பார்வையாளரை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது குறித்து வி.மைத் ரேயன் கூறும்போது, “தமிழக முதல்வரே தேர்தல் பொறுப் பாளர் பட்டியலில் 4-வது இடத்தில் இடம் பெற்றுள் ளார். இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்து றையினர் பாரபட்சமின்றி செயல்படமுடியாது. இவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அங்கு மத்திய பாதுகாப்பு படையினரை உடனடியாக அனுப்புவ துடன், மத்திய பார்வை யாளரை நியமித்து தேர்தலை நடத்த வேண்டும். இதை தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தினோம். தமிழக அமைச்சர்கள் முதல்நாளில் இருந்தே மாற்றுக்கட்சியினரை குறிப்பாக எங்கள் கட்சியினரை நேரிலும், தொலைபேசியிலும் மிரட்டுகின்றனர். சில அமைச்சர்கள் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும்போது கையும், களவுமாகப் பிடிபட்டு தப்பியுள்ளனர். இவற்றை ஆதாரங்களுடன் புகாராக அளித் துள்ளோம்” என்றார்.
அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) சார்பில் இவர்கள் தேர்தல் ஆணையரிடம் அளித்துள்ள மனுவில் வாக்காளர்களுக்கு சலுகை மழை என்ற பெயரில் பணமாகவும், பொரு ளாகவும் தரப்படுவதாக புகார் கூறியுள் ளனர். அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்திய அதிகாரிகள், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
செய்தியாளர்களிடம் கே.பி.முனு சாமி கூறும்போது, “எங்கள் சின்னத்தை இரட்டை இலை போல் நாங்கள் பயன்படுத்துவதாகவும் அதை மாற்ற வேண்டும் எனவும் தினகரன் தரப்பினர் கூறுகின்றனர். தோல்வி பயம் காரணமாகவே இப்புகாரை கூறுகின்றனர்” என்றார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானதை தொடர்ந்து அவரது ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணிக்கு தெரு மின்விளக்கும், சசிகலா அணிக்கு தொப்பியும் சின் னமாக ஒதுக்கப்பட்டுள்ளது.