

கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி டெல்லியில் ஜாட் சமூகத்தினர் சார்பில் டெல்லியில் இன்று நடைபெற இருந்த மாபெரும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹரியாணா, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வசிக்கும் ஜாட் சமூகத்தினர், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், தங்கள் கோரிக்கை நிறைவேறாததால் இன்று டெல்லிக்கு சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். மேலும் எல்லையில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் மறியலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.
9 போலீஸார் காயம்
இதற்காக ஜாட் சமூகத்தினர் ஹரியாணாவிலிருந்து வாகனங்கள் மூலம் நேற்று டெல்லிக்கு புறப்பட்டனர். அப்போது படேகாபாத் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்களை போலீஸார் தடுக்க முயன்றனர். அப்போது போலீஸார் மீது கற்களை வீசினர். இதையடுத்து போலீஸார் லேசாக தடியடி நடத்தினர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் உட்பட 9 போலீஸார் காயமடைந்தனர். மேலும் போலீஸாரின் 2 வாகனங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.
போராட்ட அறிவிப்பு காரணமாக, டெல்லியில் போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போராட்டக்காரர்களை தடுப்பதற்காக, ஆயிரக்கணக்கான போலீஸாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். மேலும் டெல்லி போலீஸாருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டது. நேற்று இரவு 11.30 மணிக்கு மேல் மாநகர எல்லையைத் தாண்டி மெட்ரோ ரயில் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார் மற்றும் மத்திய அமைச்சர் வீரேந்திர சிங் உள்ளிட்டோர் ஜாட் சமுதாய சங்க தலைவர் யாஷ்பால் மாலிக் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக ஜாட் சமுதாயத்தினர் அறிவித்துள்ளனர்.