

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிகார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்பி ஜெகதீஸ் சர்மா உள்பட மற்ற 44 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பினை அடுத்து லாலு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள பீர்ஸா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லாலு பிரசாத் யாதவ், 1990 ஆம் ஆண்டு பிகார் முதல்வராக இருந்த போது, கால்நடைகளுக்கு தீவனம் வழங்கும் திட்டத்தில் ரூ. 900 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது. இது தொடர்பாக மொத்தம் 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், சாய்பாஸா மாவட்ட கருவூலத்தில் இருந்து ரூ. 37.7 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டின் மீது, லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக அவர் மீது பதியப்பட்டுள்ள ஆறு வழக்கு களில் இந்த வழக்கில்தான் முதன் முறையாக அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனையும் அறிவிக்கப்படவுள்ளது.
இதே வழக்கில், பிகார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்பி ஜெகதீஸ் சர்மா மற்றும் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 45 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
பதினேழு ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 45 பேரும் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரவாஸ் குமார் சிங் இத்தீர்ப்பை திங்கள்கிழமை வழங்கினார்.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் அக்டோபர் 3-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. லாலு பிரசாத் மீது மேலும் 5 வழக்குகள் உள்ளன. இவற்றில் 4 வழக்குகள் ஜார்க்கண்ட் மாநிலத்திலும், ஒரு வழக்கு பிகாரிலும் விசாரிக்கப்படுகிறது.
சிறையில் அடைப்பு
தீர்ப்பு வெளியானதை அடுத்து லாலு, ஹோத்வாரில் உள்ள பீர்ஸா முண்டா மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் எதுவும் கூற லாலு மறுத்துவிட்டார். அமைதி யாகக் காணப்பட்ட அவர், தன் மகன் தேஜஸ்வியுடன் காரில் பிர்ஸா முண்டா மத்திய சிறைக்குச் சென்றார்.
லாலுபிரசாத் தவிர பிகார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் 36 குற்றவாளிகளும், சிறைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். ஐஏஎஸ் அதிகாரி ஆறுமுகம், பிகார் முன்னாள் அமைச்சர் வித்யா சாகர் நிஷாத், முன்னாள் எம்எல்ஏ துருவ் பகத் மற்றும் தீவன விநியோகஸ்தர்கள் 5 பேருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படவுள்ளது.
எம்.பி. பதவி பறிபோகிறது
குற்றவழக்குகளில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கால சிறைத் தண்டனை பெறும் எம்எல்ஏ, எம்.பி.க்களை தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே பதவியைப் பறிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வரும் அக்டோபர் 3-ல் தண்டனை விவரம் அறிவிக்கப் படவுள்ளது. அவருக்கு குறைந்தது 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். எனவே, லாலு பிரசாத்திற்கு தண்டனை அறிவிக்கப்பட்ட உடன், அவரது எம்.பி. பதவி பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஜெகதீஷ் சர்மாவின் எம்பி பதவியும் பறிபோகலாம்.