Last Updated : 03 Feb, 2017 05:39 PM

 

Published : 03 Feb 2017 05:39 PM
Last Updated : 03 Feb 2017 05:39 PM

இ.அகமது மரணத்தை கையாண்ட விதம்: விசாரணை நடத்த எம்.பி.க்கள் கோரிக்கை

முன்னாள் மத்திய அமைச்சர் இ.அகமது மரணத்தை கையாண்ட விதம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தினார்.

“மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட உடனே அகமது இறந்தார். ஆனால் அவரது மரணம் மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக யெச்சூரி பேதும்போது, “இ.அகமது, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டவுடன் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் சிலர் என்னிடம் தெரிவித்தனர். சிலர், அகமது பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் இறந்தார் என்றனர். காய சிகிச்சை பிரிவில் கூடுதல் வசதிகள் இருப்பதாக அகமது அங்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது மரணச் செய்தி முக்கியத்துவம் பெறாத வகையில் கையாளப்பட்டுள்ளது. அவரது மரணம் கையாளப்பட்ட விதம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

கடந்த ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றும்போது, இ.அகமதுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. பிப்ரவரி 1-ம் அதிகாலை 2.15 மணிக்கு அவர் இறந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் யெச்சூரி மேலும் பேசும்போது, “பிரதமர் அலுவலகத்தில் இருந்து தலையீடு இருந்ததாக எனக்குத் தெரியவந்துள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது வெட்கக்கேடானது. இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். எனக்கு கிடைத்த தகவல் தவறாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். ஆனால் இது சரியாக இருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனையில் அகமதுவை பார்க்க மூத்த அரசியல் தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் தொடக்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. நெருங்கிய உறவினர் அனுமதியின்றி ஒருவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க முடியாது. அவரது மரணம் குறித்த அறிவிப்பு எப்படி, ஏன் தாமதம் ஆனது என்பதை அறிய விரும்புகிறேன்” என்றார்.

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், குறிப்பாக கேரள எம்.பி.க்கள் இந்த விவகாரத்தை நேற்று மதியம் எழுப்பினர். அப்போது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் – பாஜக எம்.பி.க்கள் சிலர் இடையே சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையை சபாநாயகர் நாள் முழுவதும் ஒத்திவைக்க நேரிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x