

‘‘நக்சல் வேட்டை மற்றும் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் உயிர்த் தியாகம் செய்யும் துணை ராணுவப் படை வீரர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
சிக்கிம் மாநிலம் ஷெராதாங் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், இந்திய – திபெத் எல்லை போலீஸ் படையின் ‘சைனிக் சம்மேளன்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நாட்டின் மத்திய மற்று கிழக்கு பிராந்தியங்களில் நக்சல்கள் வேட்டையில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் உள்ளனர். மிகவும் கடினமாக உயர்ந்த மலைப் பகுதிகளில் பணியாற்றுகின்றனர். நமது வீரர்களின் தியாகத்தை பணத்தால் ஈடு செய்ய முடியாது. எனினும், அவர்களது குடும்பத்தினருக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்பட கூடாது.
எனவே, உயிர்த் தியாகம் செய்யும் துணை ராணுவ படை வீரர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும். அத்துடன் துணை ராணுவத்தில் 34 ஆயிரம் கான்ஸ்டபிள்கள், தலைமை கான்ஸ்டபிள்களாக பதவி உயர்த்தப்படுவார்கள். துணை ராணுவப் படையினருக்கு இன்னும் ஏராளமாக செய்ய வேண்டி உள்ளது. வரும் நாட்களில் அவர்களின் தேவைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு மொலைப் ஆப் அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் தங்கள் குறைகளை இந்திய – திபெத் எல்லைப் பாதுகாப்புப் போலீஸார் தெரிவிக்கலாம். அதன் மீது உள்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் அறிவித்தார்.