

மகேந்திரகிரி திரவ இயக்க திட்ட மையத்தை தன்னாட்சி பெற்ற மையமாக அறிவிக்க இருக்கும் விழா வெள்ளிக்கிழமை (ஜன.31) நடப்பது உறுதியாகியுள்ள நிலையில், மாநிலங்களவை எம்.பி. கனிமொழி உள்ளிட்ட திமுக தரப்பை விழாவுக்கு அழைக்க இஸ்ரோ நிர்வாகம் மறுத்துவிட்டது.
குலசேகரப்பட்டினத்தில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க திமுக குரல் கொடுப்ப தாலேயே இஸ்ரோ புறக்கணிப்பு செய்துள்ளதாக குற்றம்சாட்டுகிறது மகேந்திரகிரி திரவ இயக்க மைய விஞ்ஞானிகள் குழு.
இதுகுறித்து மகேந்திரகிரி மையத்தின் விஞ்ஞானிகள் ‘தி இந்து’விடம் கூறுகையில்,
“மகேந்திரகிரி திரவ இயக்க மையப் பணியாளர்கள் சங்கத்தில் இருந்து மூன்று நாள்களுக்கு முன்னதாகவே யாரை எல்லாம் விழாவுக்கு அழைக்க வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை மட்டுமே அழைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏனெனில் குலசேகரப்பட்டினத்தில் மூன்றாவது ராக்கெட் தளம் அமைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்துவருகிறது திமுக.
இதற்காக கனிமொழி எம்.பி. தரப்பில் இருந்து ராக்கெட் போன்ற வடிவமைப்பில் நினைவுப் பரிசு மற்றும் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் தளம் அமைக்கப்பட்டால் நாட்டுக்கு ஏற்படும் நன்மைகள், அதன் தொழில்நுட்ப விவரங்கள், அதன் மூலம் தென்மாவட்டங்கள் பெறும் வளர்ச்சி ஆகிய தகவல்கள் அடங்கிய சிறு புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை விழா மேடையில் அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் அவர் வெளியிட திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதை தவிர்க்கவும், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே திமுக தரப்பை இஸ்ரோ அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.
பணியாளர்கள் சங்கத்தில் இருந்து இதுகுறித்து கேட்டதற்கு ‘கனிமொழி எம்.பி.யை அழைக்க புரோட்டாக்கால் இல்லை’ என்கிறார்கள். அப்படி எனில் முன்னாள் மத்திய அமைச்சரான தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் பக்கத்து மாவட்டத்து எம்.எல்.ஏ-வான காங்கிரஸின் விஜயதாரணிக்கு மட்டும் புரோட்டாக்கால் எங்கிருந்து வந்தது? மேலும் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் இதை அரசியலாக்கி திமுக-வைப் புறக்கணிக்கிறதா? என்கிற சந்தேகமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்கள்.