Published : 25 Aug 2016 08:54 AM
Last Updated : 25 Aug 2016 08:54 AM

கப்பல் ரகசியம்.. கசிந்தது எப்படி?- ’மசாகான் டாக்’ நிறுவனத் தலைவர் விளக்கம்

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும், மசாகான் டாக் லிமிடெட் நிறுவன தலைவர் அட்மிரல் ராகுல் ஷிராவத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் திட்டம், திட்டமிட்டப்படி நடந்து கொண்டிருக்கிறது. தற் போது வெளியாகியுள்ள ரகசியங் கள் உண்மையானவையா என்று உறுதி செய்ய வேண்டி உள்ளது. அதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். வெளியில் கசிந்துள்ள ரகசியங்கள் உண்மைதான் என் றால், அது மிகப்பெரிய விஷய மாகும்.

அதற்கு காரணமானவர்கள் யார் என்பதையும் முடிவு செய்ய வேண்டும். இந்த ரகசியங்கள் எங்கள் நிறுவனத்தில் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை. தற்போது ரகசியங்கள் கசிந்துள்ளதால், முக்கிய ஆவணங்களை பாதுகாக்க இன்னும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அதிநவீன 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா திட்டமிட்டது. நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கித் தர ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகள் போட்டியிட்டன. ஆனால், 40 பில்லியன் டாலர் அளவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நிறுவனம் முடித்துவிட்டது. மேலும், இந்தியாவுக்காக அடுத்த தலைமுறை 6 நீர்மூழ்கிக் கப்பல்களை ரூ.64 ஆயிரம் கோடியில் உரு வாக்கித் தரவும் பிரான்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதனால், ஆஸ்திரேலியாவை குறி வைத்து, அந்த ஆவணங்கள் தற்போது கசியவிடப்பட்டிருக் கலாம். எனவே, ஸ்கார்பீன் ஆவணங் கள் கசிந்தது, உண்மையில் என்ன நடந்தது, எங்கு, எந்தளவுக்கு ரகசியங்கள் கசிந்துள்ளன என்பதை பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவனம் தான் கண்டறிய வேண்டும். தற்போது வெளிவந்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பிறகுதான் உண்மை நிலவரம் தெரிய வரும். தேவைப்பட்டால் கப்பல் படையும், மசாகான் டாக் நிறுவனமும் இணைந்து இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்யும்.

இவ்வாறு ராகுல் ஷிராவத் கூறினார்.

பாகிஸ்தான், சீனாவுக்கு சாதகம்

இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்கள் கசிந்துள்ளது, பாகிஸ்தான், சீனாவுக்கு சாதகமாக இருக்கும் என்று ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை கூறியுள்ளது.

இந்திய கப்பல் படையை மேம்படுத்த ரூ.23,562 கோடி மதிப்புள்ள 6 ஸ்கார்பீன் கப்பல்களை பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா உருவாக்கி வருகிறது. இவற்றின் ரகசியங்கள், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு மிக முக்கியமாக இருக்கும் என்று ரகசியங்களை கசியவிட்ட ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை கூறியுள்ளது.

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் எவ்வளவு ஆழம் வரை செல்லும், அதில் இருந்து ஏவுகணைகளை எப்படி தாக்கும், அதில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்கள் எவ்வளவு தூரத்துக்கு எதிரி இலக்குகளை கணிக்கும் போன்ற அனைத்து ரகசியங்களும் கசிந்துள்ளதால் இந்திய கப்பல் படைக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

கம்ப்யூட்டரில் இருந்து ‘ஹேக்கிங்’ - விசாரணை அறிக்கை அளிக்க மனோகர் பாரிக்கர் உத்தரவு

நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் கசிந்தது குறித்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று கூறியதாவது:

ரகசியங்கள் கசிந்தது தொடர் பாக நள்ளிரவு 12 மணிக்கு எனக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. இந்தியாவுக்காக பிரத்தியேகமாக வடிவமைக் கப்பட்டுள்ள ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியங்கள் தான் கசிந்துள்ளனவா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கப்பலின் எந்தெந்த விவரங்கள் கசிந்துள்ளன என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி கப்பல் படைத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளேன். எனினும், 100 சதவீத ரகசியங்கள் கசிந்ததாக தெரியவில்லை.

கம்ப்யூட்டரில் இருந்து யாராவது ரகசியங்களை ‘ஹேக்கிங்’ செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இந்த ரகசியங்கள் கசிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் ரகசியங்கள் எப்படி கசிந்தது என்பதை கண்டுபிடிப்போம்.

இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.

ஸ்கார்பீன் எப்படி இருக்கும்?

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் மொத்தம் 66 மீட்டர் நீளமுடையது. டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய இது கடலில் 300 மீட்டர் ஆழம் வரை சென்று எதிரியின் இலக்குகளைத் துல்லியமாக கணிக்க வல்லது. மொத்தம் 6 ஸ்கார்பீன் கப்பல்கள் இந்தியாவில் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் முதல் கப்பல் உருவாக்கப்பட்டு ‘ஐ.என்.எஸ். கேல்வரி’ என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. மற்ற 5 கப்பல்கள் வரும் 2020-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு கப்பல் படையிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேல்வரி கப்பல் ஒத்திகைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டுக்குள் இந்த ஒத்திகை முடிந்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கப்பல் படையில் சேர்க்கப்பட இருந்த நிலையில் இதன் ரகசியங்கள் கசிந்துள்ளன.

ரூ.23 ஆயிரம் கோடியில் புராஜக்ட் - 75

மும்பையில் உள்ள ‘மசாகான் டாக் லிமிடெட்’ என்ற நிறுவனம்தான் பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.23 ஆயிரம் கோடியில் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி வருகிறது. அதற்கு, ‘புராஜக்ட்-75’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்குதான் பிரான்சின் டிசிஎன்எஸ் கப்பல் கட்டும் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது.

ஆதிக்கம் செலுத்தும் சீனா

கப்பல் படையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பலத்தைவிட சீனா அதிக பலமுள்ளதாக உள்ளது.

இந்தியாவிடம் தற்போது 13 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவை மிகவும் பழமையானவை. தவிர ரஷ்யாவிடம் இருந்து ‘அகுலா-2’ என்ற அணுஆயுதங்களை ஏவக்கூடிய நீர்மூழ்கிக் கப்பலை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளது. மேலும், ஜெர்மனியின் எச்டிடபிள்யூ 209 ரக நீர்மூழ்கி கப்பலையும் வைத்துள்ளது. ஆனால், இவை எல்லாம் திடீரென போர் சூழ்நிலை ஏற்பட்டால் உடனடி தாக்குதலுக்கு சரியாக இருக்காது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரான்ஸ் தொழில்நுட்பத்துடன் சொந்தமாக ஸ்கார்பீன் நீர்மூழ்கி வந்துவிட்டால் இந்திய கப்பல் படை சக்தி வாய்ந்ததாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டீசல் - மின்சாரத்தில் இயங்கும் 53 நீர்மூழ்கிக் கப்பல்களை சீனா வைத்துள்ளது. இவற்றில் 5 நீர்மூழ்கிக் கப்பல்கள் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடியவை. 4 நீர்மூழ்கிக் கப்பல்கள் அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஏவுகணைகளைக் கொண்டவை.

போட்டி நிறுவனங்கள் சதியா?- பிரான்ஸ் நிறுவனம் பதில்

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் வெளியானது குறித்து டிசிஎன்எஸ் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறியதாவது:

தற்போது வெளியாகி உள்ள ரகசியங்கள் உண்மையானவையா என்று எங்களுக்குத் தெரியாது. நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு போட்டி அதிகரித்துள்ளது. எனவே, எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதற்கு இல்லை.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்காக நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க டிசிஎன்எஸ் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றது. அதனால் ஏமாற்றம் அடைந்த போட்டி நிறுவனங்கள், இந்த ரகசியங்களை கசியவிட்டிருக்கலாம்.

ரகசியங்கள் கசிந்துள்ளதால், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் எங்களிடம் ஒப்பந்தம் செய்துள்ள நாடுகள் டிசிஎன்எஸ் நிறுவனத்தை கேள்வி கேட்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பொருளாதார போரில் இதுபோல் ரகசியங்களைக் கசியவிடுவது ஒரு உத்திதான்.

இவ்வாறு டிசிஎன்எஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x