

மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் திங்கட்கிழமை நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பேசுகையில், ''நாட்டில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக பல்வேறு துறைகளில் மருத்துவ நிபுணர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
இந்த குறையைப் போக்க மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். அதன்படி இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்படும்.
மருத்துவப் படிப்புகளுக்காக நீட் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் முறைகேடுகள் தடுக்கப்படும்'' என்று ஜே.பி.நட்டா பேசினார்.