Last Updated : 28 Nov, 2014 12:45 PM

 

Published : 28 Nov 2014 12:45 PM
Last Updated : 28 Nov 2014 12:45 PM

இராக்கில் 39 இந்தியர்கள் இறந்ததற்கான ஆதாரம் இல்லை: சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்

இராக்கில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியான ஊடக செய்திகளுக்கு ஆதாரம் இல்லை என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்தார்.

மாநிலங்களவையில் சமாஜ்வாதி எம்.பி. ஜெயா பச்சன், இராக்கில் சிக்கிய இந்தியர்களின் நிலை குறித்து அரசியல் ஆதாயம் பார்க்காமல் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உடனே, குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் ஷர்மா, "இராக்கில் சிக்கிய இந்தியர்களை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் படுகொலை செய்ப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சுமார் 39 இந்தியர்கள் பலியானதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் வெளியுறவுத்துறை இந்த விவகாரத்தில் மவுனம் காக்கிறது" என்றார்

அப்போது பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், "இதுவரை கடந்த 10 நாட்களில் இந்தியர்கள் கொல்லப்பட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. ஆனால் இவை எதுக்கும் தக்க ஆதாரம் இல்லை.

இராக்கில் இருக்கும் நமது தூதரக உதவியாளர் மூலம் வரும் தகவல்களின்படி இந்தியர்கள் அங்கு உயிரோடு இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று(வியாழன்) இரவு கூட நம்பக்கத்தக்க தகவல்கள் இது குறித்து விவரம் தெரிவித்தன. ஆனால் இந்தியர்கள் உயிரோடு இருப்பதனை நிரூபிக்க நம்மிடம் தேவையான எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் இல்லை.

இதை தவிர அங்கிருந்து 6-க்கும் மேற்பட்ட தகவல்கள் இந்தியர்கள் உயிரோடு இருப்பதாக தெரிவிக்கின்றன.

ஆதாரங்கள் இல்லாமல் வெளியாகும் தகவல்களை அரசு நம்ப தயாராக இல்லை. இது குறித்து பேசி மக்களை அச்சமடைய செய்யவும் அரசு விரும்பவில்லை. நான் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகின்றேம்.

இந்தியர்களை பத்திரமாக கொண்டுவர வேண்டியது அரசின் கடமை, அதனை நாங்கள் சரியான முறையில் மேற்கொண்டு வருகிறோம். இந்தியர்கள் உயிரோடு இருக்கின்றனர் என்ற நம்பிக்கையில் பேரில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது" என்றார்.

முன்னதாக இராக்கின் எர்பில் நகரில் கடந்த ஒரு வருடமாக கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு வைத்திருந்த சுமார் 40 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து தப்பித்த இந்தியர் ஒருவர் இராக்கில் கட்டுமான பணி மேற்கொண்டுவரும் வங்கதேச நாட்டவர்களிடம் கூறியதாக ஏ.பி.பி. செய்தி நிறுவனம் வியாழன் இரவு தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x