

லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலத்தை பினாமி பெயரில் வாங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர்களுக்கு சொந்தமான சுமார் 20 இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணினிகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரூ.8 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆடிட்டர் ராஜேஷ் குமார் அகர்வாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லியில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பினாமி நில வர்த்தகத்தில் ஈடு பட்டதாகக் கூறப்படும் மிஷைல் பேக்கர்ஸ் அன்ட் பிரின்ட்டர்ஸ் நிறுவனத்துக்கும் மிசா பாரதிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு ராஜேஷ் குமார் அகர்வால் உதவியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூன் முதல் வாரத்தில் டெல்லியில் உள்ள விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகுமாறு மாநிலங்களவை உறுப்பினரான மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் பினாமி நில பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.