

வாக்குப்பதிவு ரகசியத்தைப் பாது காக்கும் விதத்தில் புதிய மின்னணு இயந்திரம் பயன்படுத்துவது தொடர் பான முடிவெடுக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், குறிப்பிட்ட வாக்குப் பதிவு மையத்தில் எந்தக் கட்சிக்கு அதிகமாக வாக்குகள் பதிவாகின என்பன போன்ற விவரங்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும். எனவே வாக்காளர்களின் ரகசியம் காக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்தது.
இதையடுத்து, கடந்த 2008-ம் ஆண்டு ‘டோட்டலைசர்’ என்ற கருவியைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதன்மூலம் வாக்குகள் பதிவான விதம் வெளியாகாது எனத் தெரி விக்கப்பட்டது.
இவ்விவகாரம் மத்திய அரசிடம் நிலுவையில் இருந்தது. இதுதொடர் பான நீதிப்பேராணை மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, முடிவெடுக்க மத்திய அரசுக்கு 8 வாரம் அவகாசம் அளித்து கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. அடுத்த கட்ட விசாரணை வரும் 2017 பிப்ரவரியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன் படுத்துவது தொடர்பாக விவாதிக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், அமைச்சர்கள் அருண் ஜேட்லி, மனோகர் பாரிக்கர், நிதின் கட்கரி, ரவி சங்கர் பிரசாத் ஆகியோரடங்கிய குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.