

ஹரியாணாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ தனது சொந்த தொகுதியிலிருந்து சண்டீகரில் உள்ள சட்டப்பேரவைக்கு 110 கிமீ தொலைவு சைக்கிளில் சென்றார்.
ஆளும் பாஜக எம்எல்ஏ வான பவன் குமார் சைனி (45) குருஷேத்ரா மாவட்டத்தில் உள்ள லத்வா பேரவைத் தொகுதியிலிருந்து முதல்முறை யாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டாக்டர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர்.
ஹரியாணா சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்க நேற்று முன்தினம் அதிகாலை 5.20 மணிக்கு குருஷேத்ராவில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட பவன் குமார் பிற்பகல் 1.45 மணி அளவில் பேரவை வந்து சேர்ந்தார். அவருடன் கட்சியின் 10 தொண்டர்களும் சைக்கிளில் வந்தனர்.
இது தொடர்பாக பவன் குமார் கூறியதாவது:
சைக்கிளில் பேரவை அருகே வந்து சேர்ந்ததும் பாதுகாப்பு அதிகாரிகள் எங்களை தடுத்து நிறுத்தினர். நான் எம்எல்ஏ என்ற விவரத்தை தெரிவித்ததும் உள்ளே செல்ல அனுமதித்தனர். என்னுடன் வந்த 10 தொண்டர்களும் பேரவையின் நுழைவாயில் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சைக்கிள் ஓட்டுவது உடல்நலனுக்கு உகந்ததாகும். சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும். தற்போதைய பரபரப்பான சூழலில் உடற்பயிற்சிக்கு போதிய கால அவகாசம் கிடைப்பதில்லை. விடிந்ததுமே பொதுமக்கள் என்னைச் சந்திக்க வருகிறார்கள். உடற்பயிற்சி செய்ய வேண்டியிருப்பதால் பிறகு வரும்படி அவர்களிடம் கூற முடியாது. சில மாதங்களாகவே எனக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி உள்ளது. எனவே சைக்கிள் ஓட்ட முடிவு செய்துள்ளேன்.
இப்போதைய சூழலில் இளைய வயதினரும் பரபரப்பான, பதற்றமான வாழ்க்கை சூழல் காரணமாக பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். நமது நாட்டில் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. எனவே உடல் நலன் மீது கவனம் செலுத்துவது அவசியமாகிறது. இதற்கு சைக்கிள் ஓட்டுவது நல்ல பலன் தரும். சைக்கிள் ஓட்டத் தெரிந்த எம்எல்ஏ, எம்பிக்களும் இந்த பழக்கத்துக்கு திரும்பவேண்டும்.
எனது தொகுதிக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களின் பிறந்தநாளில் அவர்களுக்கு மரக்கன்று பரிசாக வழங்கி வருகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.