காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய  எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணைந்தார்
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று பாஜகவில் முறைப்படி இணைந்தார். இதன்மூலம் கர்நாடகாவில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளதாக கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மண்டியா வைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா (84) 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக செயல்பட்டவர். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும், கர்நாடக முதல்வராகவும், மகாராஷ்டிர ஆளுநராகவும் பதவி வகித்தவர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 28-ம் தேதி காங்கிரஸ் கட்சி யில் இருந்து விலகுவதாக எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்தார். இதையடுத்து கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோர் அவரை நேரில் சந்தித்து பாஜகவில் இணையுமாறு அழைப்பு விடுத்தனர். அப்போது பாஜகவில் இணைந்தால் முக்கிய பதவிகள் வழங்குவதாக அவரிடம் உறுதி அளித்ததாக தெரிகிறது.

இதையடுத்து எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த 15-ம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய முடிவெடுத்தார். எதிர் பாராத விதமாக அவரது சகோதரி சுனிதா மரணமடைந்ததால் அம்முடிவை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் நேற்று டெல்லி சென்ற எஸ்.எம்.கிருஷ்ணா பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் அமித் ஷா முன் னிலையில் அக்கட்சியில் இணைந் தார். அவருக்கு பூங்கொத்து வழங்கி அமித் ஷா மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து பேசிய அமித் ஷா, ‘‘கர்நாடக அரசியலில் அனுபவமும், செல்வாக்கும் மிகுந்த எஸ்.எம்.கிருஷ்ணாவை பாஜகவுக்கு வரவேற்கிறேன். அவரது ஆட்சியில் கர்நாடகா மாநிலம் மென்பொருள், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளி லும் வளர்ச்சி அடைந்தது. அவரது வருகையால் கர்நாடகாவில் பாஜக வின் பலம் அதிகரித்துள்ளது’’ என்றார்.

மோடிக்கு புகழாரம்

பின்னர் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, ‘‘எனது அரசியல் வாழ்வில் இது மிக முக்கியமான நிகழ்வு. நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பாஜகவில் இணைவதில் பெருமை கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான ஆட்சியால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெரும் புகழ் கிடைத்துள்ளது. அவரது அயராத உழைப்பினால் இந்தியா வளர்ந்த நாடாக மாறி வருகிறது. அமித் ஷாவின் தலைமையில் நாடு முழுவதும் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. மோடி, அமித் ஷா தலைமையின் கீழ் பணியாற்றுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன்’’ என்றார்.

வரும் ஏப்ரல் 9-ம் தேதி கர்நாடகாவில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட எஸ்.எம்.கிருஷ்ணா திட்டமிட்டுள்ளார். பாஜகவில் அவர் இணைந்ததால் பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட தென் கர்நாடகாவில் காங்கிரஸூக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in