

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குட்டைப் பாவாடை உள்ளிட்ட ஆடைகளை அணியக் கூடாது என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா அறிவுறுத்தியுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
ஆக்ராவில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, ''வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் இரவில் குட்டைப் பாவாடை உள்ளிட்ட சிறிய ஆடைகளை அணியக் கூடாது. இரவில் தனியாகச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். இவை அவர்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடும்.
வெளிநாட்டுப் பயணிகளிடம் ஒன்றைக் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இந்தியக் கலாச்சாரமும், மேற்கத்திய கலாச்சாரமும் வெவ்வேறானவை. இதற்காக நான் மேற்கத்திய கலாச்சாரத்தைத் தவறாகக் கூறவில்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தவே விரும்புகிறேன்'' என்றார்.
இதுகுறித்து மேலும் பேசிய சர்மா, ''ஆக்ரா, மதுரா, பிருந்தாவன் உள்ளிட்ட கோவில் நகரங்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களைப் பற்றி அறிந்தபின்னரே அவற்றை அணுகவேண்டும்.
அத்தோடு துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்கவோ, நடந்தால் அப்போது உதவும் விதத்திலோ, பயணிகள் தாங்கள் செல்லும் கார், ஆட்டோ ஆகிய வாடகை வாகனங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.