Published : 16 Aug 2016 05:43 PM
Last Updated : 16 Aug 2016 05:43 PM

பாகிஸ்தானை நரகத்துடன் ஒப்பிட்ட பாரிக்கர்; சார்க் மாநாட்டில் ஜேட்லி பங்கேற்பது சந்தேகம்

பாகிஸ்தானுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

இதனிடையே, பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வது நரகத்துக்கு செல்வது போன்றது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) நிதி அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் அருண் ஜேட்லி பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி இறுதி முடிவு எடுக்க உள்ளார். அதேநேரம் இந்தியா சார்பில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

மேலும், கடந்த 4-ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த சார்க் கூட்டமைப்பின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது நடந்த சில கசப்பான சம்பவங்களும், அருண் ஜேட்லி இந்த மாநாட்டை புறக்கணிப்பதற்கான மற்றொரு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஹரியாணா மாநிலம் ரிவாரியில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசும்போது, "பாகிஸ்தான் எப்போதும் தீவிரவாத அமைப்புகளை ஊக்குவித்து வருகிறது. இப்போது அதன் விளைவுகளை அனுபவித்து வருகிறது.

இந்நிலையில், அந்த நாட்டுக்கு செல்வது நரகத்துக்கு செல்வது போன்றது. இந்தியா மீது யாராவது தாக்குதல் நடத்த முயற்சித்தால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.

சுதந்திர தின உரையில் முதல் முறையாக...

முன்னதாக, ஜம்மு - காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி கடந்த மாதம் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, "பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கில்கித் - பல்திஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் அரசு பதில் சொல்ல வேண்டும்" என்று கூறியிருந்தார்.

சுதந்திர தின உரையில் இந்திய பிரதமர் ஒருவர் பலுசிஸ்தான் விவகாரம் குறித்து பேசியது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு கொள்கையின் தலைவர் சர்தாஜ் அஜிஸ் கூறும்போது, "காஷ்மீர் பிரச்சினையிலிருந்து உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்ப மோடி முயற்சி செய்கிறார்" என கூறியிருந்தார். இதனால் கடந்த 2 நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x