Last Updated : 03 Oct, 2013 01:21 PM

 

Published : 03 Oct 2013 01:21 PM
Last Updated : 03 Oct 2013 01:21 PM

மீண்டும் பாலகிருஷ்ணாவா.. புதிய நீதிபதி நியமனமா..?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து கர்நாடக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கடந்த திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் அழுத்தமாக சுட்டிக்காட்டி இருந்தது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள கர்நாடக அரசு, நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கலாமா.. அல்லது உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை யைக் கருத்தில் கொள்ளாமல் புதிய நீதிபதியை நியமிக்கலாமா என தீவிரமாக யோசித்து வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எழுதப் போகும் நீதிபதி யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணா, செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.

பாலகிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கடந்த கடந்த 26-இல் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.சௌஹான் மற்றும் நீதிபதி எஸ்.ஏ.போப்டே அடங்கிய அமர்வு செப்டம்பர் 30ஆம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதில் பல அழுத்தமான அம்சங்கள் குறிப்பிடப்பட்டு இருப்பதால் பாலகிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஏனென்றால், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை ஒப்பந்த அடிப்படையில் நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவி காலத்தை நீட்டிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு இருக்கிறது.

கர்நாடக அரசின் சட்ட விதிமுறைகளை அலசி ஆராய்ந்த பிறகே இப்படியொரு அழுத்தத்தை உச்சநீதிமன்றம் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கர்நாடக அரசு நினைத்தால் நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு பதவி வழங்கலாம் என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், வழக்கின் தன்மையை கருதி பதவி நீட்டிப்பு வழங்குவது பற்றி கர்நாடக அரசு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.

கர்நாடக அரசுக்கு அறிவுரை

மேலும் ஜெயலலிதாவின் வழக்கில் ஏற்பட்ட திடீர் பின்ன டைவுக்கு காரணமான கர்நாடக அரசுக்கு சில அறிவுரைகளையும் வழங்கி இருக்கிறது. அதில் ''நீதி, சமதர்மம், வெளிப்படையான நேர்மையான ஆட்சி முறை தான் நல்லாட்சிக்கு அவசியம். இந்திய அரசியலமைப்பு சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை குடிமக்களின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காக வும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனை விடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு (ஜெய லலிதா) இந்திய அரசியலமைப்பு சட்டம் 21-ஆம் பிரிவு வழங்கும் உரிமைகளை கர்நாடக அரசு ஒருபோதும் மறுக்க கூடாது'' என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த திடீர் 'குட்டு' கர்நாடக அரசை கடுமையாக பாதித்து இருக்கிறது.

நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவி நீட்டிப்பு குறித்து உச்ச நீதிமன்றம் இத்தனை அழுத்தமான காரணங்கள் சொல்வதற்கு முக்கியமான காரணம், கடந்த 17 ஆண்டுகளாக இழுத்தடித்து வந்த இந்த வழக்கை இறுதி கட்டத்தை நோக்கி நகர்த்தியது தான்.

இறுதிக்கட்டத்தை எட்டிய வழக்கு

கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி ஜெயலலி தாவின் வழக்கில் நீதிபதியாக பொறுப்பேற்ற பாலகிருஷ்ணா, மிகக் குறுகிய காலத்தில் வழக்கு தொடர்பான 34 ஆயிரம் பக்க ஆவணங்களையும் படித்து 99 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் சொத்துக் குவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் புதிய நீதிபதியை நியமித்தால் வழக்கின் தீர்ப்பு வெளியாக காலதாமதம் ஏற்படும் என்பதாலே உச்ச நீதிமன்றம் பால கிருஷ்ணாவின் பதவி நீட்டிப்பு குறித்து கர்நாடக அரசுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது என்கிறார்கள் சிறப்பு நீதிமன்ற வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் அறிவுரையை தட்டிக் கழித்து விட்டு புதிய நீதிபதியை நியமித்தால், ஜெயலலிதா மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்வார் என்ற அச்சமும் கர்நாடக அரசுக்கு இருக்கிறது.

எனவே, கர்நாடக அரசு, புதிய நீதிபதியை நியமிக்குமா அல்லது பாலகிருஷ்ணாவின் பதவிக் காலத்தை நீட்டிக்குமா என்ற கேள்விக்கு இன்னும் சில நாட்களில் பதில் கிடைத்து விடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x