

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது அரசியல் சட்டப் பிரிவு 14-க்கு (சமஉரிமை) எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.
இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதத்தையும் கேட்ட உச்ச நீதிமன்றம் அடுத்த விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் அண்மையில் ஆயுளாகக் குறைத்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேர் உள்பட வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முடிவு செய்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்தது.
இதனிடையே ராஜீவ் காந்தியோடு பலியானவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாஸ், ஜான் ஜோசப் மற்றும் அமெரிக்கை நாராயணன், ஆர். மாலா, சாமுவேல் திரவியம், ராகசுகந்தன் ஆகியோர் சார்பில் குற்றவாளி களை விடுவிக்க தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு வாதம்
இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோட்டகி, ராகேஷ் திரிவேதி ஆகியோர் ஆஜராகினர்.
ரோட்டகி வாதாடியபோது, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விவகாரத்தில் மத்திய அரசிடம் தமிழக அரசு பரிந்துரை மட்டுமே செய்துள்ளது. இது மத்திய, மாநில அரசுகளின் கலந்தாலோசனையில் ஓர் அங்கம்தான், இதற்கு மத்திய அரசு தனது ஆட்சேபங்களை தெரிவித்திருக்கலாம். அதைவிடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது என்றார்.
மத்திய அரசு எதிர்ப்பு
மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லூத்ரா ஆஜராகி தமிழக அரசின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
“ராஜீவ் படுகொலை சம்பவத்தின் போது மனித குண்டு தாக்குதலில் 18 அப்பாவிகள் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வது சட்டப் பிரிவு 21-க்கு (சமஉரிமை) எதிரானது. இச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. பாதிக்கப்பட்ட அனைவராலும் நீதி கேட்டு போராட வழியில்லாததால் அவர்கள் சார்பாக மத்திய அரசு வாதாடுகிறது என்றார்.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வாதம்
ராஜீவ் காந்தியோடு பலியானவர்கள் குடும்பத்தினர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் ஆஜரானார். அவர் வாதாடியபோது, குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிப்பது, தண்டனையை ரத்து செய்வது, விடுதலை செய்வது ஆகிய அதிகாரங்கள் மாநில அரசுக்கு கிடையாது, எனவே ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.