

2ஜி ஊழல் வழக்கில், தொழில் அதிபர் ரத்தன் டாடா - நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள் பதிவான டேப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி ஜி.எஸ்.சிங்வி அறிவித்துள்ளார்.
நீரா ராடியா வழக்குப் பின்னணி...
டெல்லியில் அரசியல் தரகராகச் செயல்பட்ட நீரா ராடியா 9 ஆண்டுகளுக்குள் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களை குவித்தார். இதை மோப்பம் பிடித்த வருமான வரித்துறை அவரது தொலைபேசி உரையாடல்களை ரகசியமாகப் பதிவு செய்தது.
2008 முதல் 2009 வரை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருடன் நீரா ராடியா நடத்திய தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டதில் 2ஜி அலைக்கற்றை ஊழல் உள்பட பல்வேறு ஊழல் விவகாரங்களின் பின்னணி தெரியவந்தது. இந்த உரையாடல் விவரங்கள் ஊடகங்களில் கசிந்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.