

அப்பாவி சிறுபான்மையினர் தவறுதலாக சிறையில் அடைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநில முதல்வர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
பல்வேறு தருணங்களில் இஸ்லாமிய இளைஞர்கள் தவறுதலாக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருவதாக தனக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருவதாக குறிப்பிட்டுள்ள ஷிண்டே இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில்: பொய் வழக்குகளில் சிறுபான்மையினர் கைது செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடுள்ளார். மேலும் தவறுதலாக கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதோடு, அவர்கள் மறுவாழ்விற்கும் மாநில அரசுகள் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.