

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதாருக்காக உதவிப்பணியில் ஈடுபட்டிருந்த ஜார்கண்ட் ஏஜென்சியை 10 ஆண்டுகள் தடை செய்துள்ளது. தோனி பற்றிய ஆதார் விண்ணப்ப சொந்தத் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் ஏஜென்சியான காமன் சர்வீசஸ் சென்டர் தோனியின் ஆதார் விவரங்களை இணையத்தில் வெளியிட்டது. இதனை தோனியின் மனைவி சாக்ஷி கண்டித்து புகார் எழுப்பினார். “ஏதாவது அந்தங்கம் மீதமுள்ளதா? ஆதார் அட்டைத் தகவல், விண்ணப்பம் உட்பட பொதுச்சொத்தாகி விட்டது” என்று ட்விட்டரில் பாய்ந்துள்ளார்.
அடுத்தவரின் சொந்த விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவது சட்ட விரோதமானது, இதனை கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி, நிச்சயம் சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி அளித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தோனி ஆதார் அட்டைக்காக விண்ணப்பித்துள்ளார், தோனியின் வீட்டுக்கு இ-சேவை ஊழியர்கள் சென்று தகவல்கள் திரட்டினர்.
தோனி தன் கைரேகையை கருவியில் வைத்தது போல் புகைப்படம் எடுத்து சேவை மையத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதே போல் தோனியின் ஆதார் விண்ணப்பமே வெளியிடப்பட்டது. இது சமூகவலைத்தளம் மூலம் பரவியது.
இதனையடுத்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் காமன் சர்வீசஸ் செண்டர் சேவை நிறுவனத்தை 10 ஆண்டுகள் தடை செய்தது. தற்போது மத்திய அமைச்சரும் சட்ட நடவடிக்கை உறுதி என்று தெரிவித்துள்ளார்.