

அரசுக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள அரிசியை ஏழைகளுக்கு வழங்காமல் மதுபான ஆலைகளுக்கு மலிவு விலையில் மத்திய அரசு வழங்குகிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அந்த மாநிலத்தின் ஆளும்கட்சியான பாஜக சார்பில் கந்த்வா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது:
காங்கிரஸ் கட்சியின் ஆவணப்போக்கு விண்ணைத் தொட்டுள்ளது. அந்தக் கட்சியின் செயல்பாடுகள் குறித்து யாருமே கேள்வி கேட்க முடியாது. அதன் தவறுகள் குறித்து யாராவது தட்டிக்கேட்டாலும் பதில் அளிப்பது இல்லை.
அரசுக் கிடங்குகளில் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆனால், அதனை மத்திய அரசு செயல்படுத்தவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஏழைகளின் பசியை ஆற்றுவதற்கு அந்த அரிசியை வழங்காமல் மதுபான ஆலைகளுக்கு கிலோ 80 பைசா என்ற விலையில் மத்திய அரசு டன் கணக்கில் விற்றுள்ளது.
மக்களுக்கு அளிக்கும் வாக்கு றுதிகளை உடைத்தெறிவதையே காங்கிரஸ் தனது வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலை இனியும் நீடிக்கக் கூடாது. காங்கிரஸுடனான உறவை மக்கள் உடைத்தெறியும் காலம் வந்துவிட்டது.
செளகானுக்கு பாராட்டு
கிராமப்புற மக்களுக்கும் மின் வசதி கிடைக்கும் வகையில் அடல் ஜோதி திட்டத்தை மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் கொண்டு வந்துள்ளார்.
மத்திய பிரதேசத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் ஆட்சியில் 4,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. முதல்வர் சிவராஜ் சிங் செளகானின் 10 ஆண்டு ஆட்சியில் மின் உற்பத்தி 11,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தின் நிலைமை எப்படி இருந்தது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
காங்கிரஸ் எப்போதுமே வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசும். பாஜக மட்டுமே வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும்.வாக்கு வங்கி அரசியலை மக்கள் விரும்பவில்லை. வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறார்கள். எனவே மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார் நரேந்திர மோடி.