

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நேற்று அமைச்சர்கள் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:
பள்ளிகளுக்கு என்சிஇஆர்டி புத்தகங்கள்
மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: தனியார் சிபிஎஸ்சி பள்ளிகள் பாடப்புத்தகங்களுக்கு அதிக தொகை வசூலிப்பதைத் தடுக்க இப்பள்ளிகளுக்கு என்சிஇஆர்டி புத்தகங்களைக் கட்டாயம் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு என்சிஇஆர்டி புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வரும் ஆண்டில் இந்த எண்ணிக்கை உயரும்.
பாக். எல்லையில் சுவர் எழுப்பும் திட்டமில்லை
உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு: பாகிஸ்தான் எல்லை நெடுகிலும் சுவர் எழுப்பும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. இந்திய பாகிஸ்தான் எல்லையில் வேலி அமைப்பது, சாலைகள், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் அமைப்பது, பிஎஸ்எப் வீரர்களை நிறுத்துவது, எல்லைச்சாவடிகள் அமைப்பது, அதிநவீன கண்காணிப்பு மேற்கொள்வது, பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் சிறப்பு வாகனங்கள் வழங்குவது என பல்வேறு வகை ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
மாரடைப்பால் அதிக வீரர்கள் பலி
உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆகிர்: நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பிஹார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த 2015-ல் சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேரும், 2016-ல் 31 பேரும், 2017-ல் ஏப்ரல் 4 வரை 13 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். என்றாலும் மோதல்களில் உயிரிழக்கும் வீரர்களை விட மாரடைப்பு, நோய் பாதிப்பு, மனஅழுத்தம், தற்கொலை, உள்ளிட்ட காரணங்களால் அதிக வீரர்கள் உயிரிழக்கின்றனர். கடந்த ஆண்டு மாரடைப்பால் 92 பேரும், மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலால் 5 பேரும், மனஅழுத்தம் மற்றும் தற்கொலையால் 26 பேரும், பணி அல்லாத பிற காரணங்களுக்காக 353 பேரும் இறந்துள்ளனர்.