மங்கள்யானை செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக அனுப்பியது இஸ்ரோ

மங்கள்யானை செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக அனுப்பியது இஸ்ரோ
Updated on
1 min read

மங்கள்யான் விண்கலத்தை புவி நீள்வட்டப் பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக அனுப்பியது இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்). இது மிக முக்கிய முன்னேற்றமாகும். மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தை நோக்கி செலுத்தும் பணி சனிக்கிழமை நள்ளிரவு 12.49 மணிக்கு நடந்தது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து விண்கலத்தில் உள்ள 440 நியூட்டன் திரவ எரிபொருள் என்ஜின் தொடர்ந்து 22 நிமிடம் இயக்கப்பட்டது. இதனால் மங்கள்யானின் வேகம் வினாடிக்கு 648 மீட்டர் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, மங்கள்யான் விண்கலம் புவி நீள்வட்ட பாதையில் இருந்துவிடுபட்டு, செவ்வாய் கிரகத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது. புவி ஈர்ப்பு சக்தியில் இருந்து விண்கலத்தை செவ்வாய் கிரகத்தை நோக்கி உந்தித் தள்ளும் மிக முக்கிய கட்டத்தை வெற்றிகரமாகத் தாண்டியது மங்கள்யான். இதைத் தொடர்ந்து, மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பும் பணி வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ அறிவித்தது. செவ்வாய் கிரக பாதையில் 300 நாட்கள் பயணம் செய்யும் மங்கள்யான், அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அதன் பின்னர் அது செவ்வாய் கிரகத்தைச் சுற்றி ஆய்வுசெய்யும். இதற்குத் தேவையான நவீன சாதனங்களும், கேமராக்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும். பூமியைப் போல செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் வாழலாம் என்பது மனிதர்களிடம் இருந்துவரும் யூகம். ஆனால், அதற்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை. புரியாத இந்த புதிருக்கு மங்கள்யான் விண்கலம் விடையளிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in