

ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் சில நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் மீதான சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு பொருத்தமற்றது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், பிரதமர் முதன்முறையாக மவுனம் கலைந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மோடி நேற்று பேட்டி அளித்தார். அப்போது உங்கள் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் (சுவாமியின் பெயரைக் குறிப்பிடாமல்), ரகுராம் ராஜன் மீது வைத்த குற்றச்சாட்டுகள் பொருத்தமானதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு மோடி அளித்த பதில்:
எனது கட்சியைச் சேர்ந்தவரோ அல்லது பிற கட்சியைச் சேர்ந்த வரோ, யாராக இருந்தாலும் இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறி யது பொருத்தமற்றது. விளம்பரத் துக்காக இதுபோன்று பேசுவது நாட்டுக்கு நல்லதல்ல. இந்த விவகாரத்தில் யாராக இருந்தாலும் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அனைத்து அமைப்புகளுக்கும் (சிஸ்டம்) தாங்கள்தான் மேலானவர்கள் என்று யாராவது கருதினால் அது தவறு.
நான் அவருடன் (ரகுராம் ராஜன்) பழகிய அனுபவம் நன்றாக இருந்தது. அவர் செய்துள்ள பணிகளை பாராட்டுகிறேன். அவர் நாட்டுப்பற்று குறைவானவர் என்று கூறுவது சரியல்ல. அவர் இந்தியாவை நேசிக்கிறார். அவர் எங்கு பணியாற்றினாலும் இந்தியாவின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவார். அவர் நாட்டுப்பற்று கொண்டவர்.
நான் பிரதமராக பதவியேற்ற 3 மாதத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட ரகுராம் ராஜன் தொடர்ந்து ஆர்பிஐ ஆளுநர் பதவியில் நீடிப்பாரா? என்று ஊடகங்கள் கேள்வி எழுப் பின. ஆனால் அவர் இன்னமும் அந்தப் பதவியில்தான் தொடர்ந்து நீடிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் மாதத்துடன் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிகிறது. இந்நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்ற கருத்து நிலவியது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “ரகுராம் ராஜன் மனதளவில் இந்திய ராக செயல்படவில்லை. அமெரிக்க குடியுரிமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு 2-வது முறை யாக ஆர்பிஐ ஆளுநர் பதவியை வகிக்க விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் கூறியிருந்தார். இதையடுத்து, தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட சிலர் புதிய ஆளுநர்களாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இவர்கள் மீதும் சுவாமி பல்வேறு குற்றச்சாட்டு களை கூறினார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற் படுத்தியதையடுத்து, சுவாமியின் இந்தக் குற்றச்சாட்டு அவரது சொந்த கருத்து என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் பாஜகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
என்எஸ்ஜியில் இணைவோம்
பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறும்போது, “ஐநா பாதுகாப்பு கவுன்சில், அணுசக்தி விநியோக நாடுகள் குழு (என்எஸ்ஜி) ஆகியவற்றில் இணைய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. என்எஸ்ஜியில் இணைவோம் என்று நம்புகிறேன். இதற்கான முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக அந்த நாட்டுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்” என்றார்.