

இஷ்ரத் ஜெஹான் என்கவுண்டர் வழக்கு தொடர்பாக காணாமல் போன கோப்புகள் குறித்த விசாரணைக் கமிட்டியின் விவரங்களைக் கேட்ட ஆர்டிஐ மனுதாரர் இந்தியரா என்பதை நிரூபிக்கக் கோரியுள்ளது உள்துறை அமைச்சகம்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.கே. பிரசாத், உள்துறை அமைச்சகக் கூடுதல் செயலர் ஆகியோர் அந்தக் கமிட்டியில் உள்ளனர்.
இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கைகளின் நகல்களைக் கேட்டு உள்துறை அமைச்சகத்திடம் ஆர்டிஐ ஆர்வலர் அஜய் துபே மனு செய்திருந்தார்.
அதற்கு உள்துறை அமைச்சகம் அவரிடம், “இது தொடர்பாக, உங்களது இந்தியக் குடியுரிமைக்கான ஆதாரங்களைக் கொடுத்தால் நல்லது” என்று தனது பதிலில் கூறியுள்ளது.
ஏனெனில் 2005, தகவலுரிமைச் சட்டத்தின்படி தகவல் கோருபவர் இந்தியக் குடிமகனாக இருப்பது அவசியம்.
வெளிப்படைச் சட்டத்தின் படி, ஆர்டிஐ மனுதாரர்கள் தங்களுடைய குடியுரிமை அடையாள ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்ல, அது வழக்கமும் இல்லை.
இந்நிலையில் மனுதாரர் அஜய் துபே கூறும்போது, “தகவல்களை வெளியிட தாமதம் செய்யும் உத்தி இது. இந்தியக் குடியுரிமைக்கான ஆதாரத்தைக் கேட்பதை ஊக்குவிக்கக் கூடாது” என்றார்.
கமிட்டித் தலைவர் பி.கே.பிரசாத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், இவர் 1983-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார். இவர் மே 31-ம் தேதி ஓய்வு பெற்றிருக்க வேண்டும், ஆனால் 2 மாதகாலம் அவருக்கு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் இஷ்ரத் ஜெஹன் என்கவுண்டர் வழக்கு தொடர்பான காணாமல் போன ஆவணங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட உள்துறை அமைச்சகம் பிரசாத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது.
இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய அட்டர்னி ஜெனரல் அளித்த வாக்குமூல அறிக்கை குஜராத் உயர் நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. பிறகு மாற்றங்களுடன் அட்டர்னி ஜெனரலின் 2-வது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, இந்த இரண்டு ஆவணங்களும் மாயமாகியுள்ளன.
மேலும் அப்போதைய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, அட்டர்னி ஜெனரல் வாஹன்வதிக்கு எழுதிய 2 கடிதங்களும் இன்று வரை எங்கு சென்றதென்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் காணாமல் போன ஆவணங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டி இன்னமும் தங்களது முடிவுகளை சமர்ப்பிக்கவில்லை என்பதால் ஆர்டிஐ மனு செய்யப்பட்டிருந்தது, இந்த ஆர்டிஐ மனுவை மேற்கொண்ட துபே என்பவரைத்தான் உள்துறை அமைச்சகம் இந்தியர் என்று நிரூபிக்கக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விசாரணைக் குழு அறிக்கை தாக்கல்
இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக விசாரிக்க அமைக்கப் பட்ட பி.கே. பிரசாத் ஒரு நபர் குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
உள்துறை செயலாளர் ராஜிவ் மெக ரிஷிக்கு அக்குழு அளித்துள்ள அறிக்கை யில், “ உள்துறை அமைச்ச கத்தில் இருந்து காணாமல் போன 5 ஆவணங்களில் ஒரு ஆவணம் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அந்த ஆவணங்கள் தெரிந்தே நீக்கப்பட்டிருக்கின்றன அல்லது தெரியாமல் நீக்கப்பட்டிருக்கின்றன அல்லது தவறுதலாக எங்கோ காணாமல் போய்விட்டன என்ற முடிவுக்கு வரப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அறிக்கையில் அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அல்லது வேறு யாரைப் பற்றியும் குறிப்பிடப்பட வில்லை. அப்போதைய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை உட்பட ஓய்வு பெற்ற 11 அதிகாரிகளிடம் பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் 52 பக்கங்களில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதியிலிருந்து 28-ம் தேதிக்குள் இந்த ஆவணங்கள் காணாமல் போயிருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது பிரமாணப் பத்திரத்தில் இஷ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.