

உத்திரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண முகாம்களில், 34 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக அம்மாநில உள்துறை செயலரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 34 குழந்தைகள் பலியாகின. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைத்தது உ.பி.அரசு. விசாரணை அறிக்கையும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், விசாரணை அறிக்கை குறித்து மாநில உள்துறை செயலர் ஏ.கே.குப்தா கூறுகையில்: "முசாபர்நகர் முகாம்களில் குழந்தைகள் நிமோனியா நோய் தாக்கத்தால்தான் பலியாகினர். யாரும் குளிர் காரணமாக பலியாகவில்லை. குளிர் காரணமாக உயிர் பலி ஏற்படும் என்றால், சைபீரியாவில் மக்கள் யாரும் உயிருடன் இருக்க சாத்தியம் இல்லை" என தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்து அரசியல் வட்டத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உள்துறை செயலரின் கருத்து மாநில அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுனா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்விட்டர் சமூக வலைதளத்தில், "குளிரால் யாரும் இறக்க மாட்டார்கள் என்றால் இதை சொன்ன அதிகாரியை குறைந்த அளவில் ஆடை அணியச் செய்து திறந்தவெளியில் இருக்கச் செய்ய வேண்டும்" என கருத்து பதிவு செய்துள்ளார்.
முதல்வர் கண்டிப்பு:
எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், "என்ன பேசுகிறோம் என்பதை அதிகாரிகள் உணர்ந்து பேச வேண்டும். கட்சித் தொண்டர்களும், அதிகாரிகளும் எதைப் பேசினாலும் கவனமாக பேச வேண்டும். முக்கியமாக யாருடைய மனமும் புண்படும் வகையில் பேசக் கூடாது" என செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, 'அது நடந்து முடிந்த விஷயம்' என மழுப்பலாக தெரிவித்தார்.
மேலும், முசாபர்நகர் நிவாரண முகாம்களில் இருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம். ஏற்கெனவே நிறைய பேர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர் என தெரிவித்துள்ளார்.