Published : 19 Aug 2016 04:28 PM
Last Updated : 19 Aug 2016 04:28 PM

ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசும் முன்னர், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும், தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தவேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.

சமீப காலமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே வார்த்தைப் போர் முற்றிவருகிறது. பாகிஸ்தான், காஷ்மீர் குறித்த பேச்சவார்த்தைக்கு இந்தியாவை அழைத்தது. அதைத்தொடர்ந்து காஷ்மீர் அல்லாத பயங்கரவாதப் பிரச்சனை குறித்துப் பேசத் தயார் என்று பாகிஸ்தான் பேச்சு வார்த்தை அழைப்பை இந்தியா நிராகரித்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய உரையால், 'பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றிப்பேசி அபாய ரேகையைத் தாண்டிவிட்டார்' என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்ஷங்கர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஐஸாஸ் அஹ்மத் சவுத்ரிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் ''இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை முன்னேற்றம் பெற வேண்டுமானால் இஸ்லாமாபாத், காஷ்மீரை நோக்கியும் மும்பையைக் குறிவைத்தும் தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தவேண்டும். எவ்வளவு விரைவில் முடியுமோ அத்தனை விரைவாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும், தீவிரவாத முகாம்களை மூட வேண்டும், தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்கள் வழங்குவதை மறுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுசாசன மீறல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், பலுசிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பினார். அப்பகுதி மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நஃபீஸ் சக்காரியா, 'இந்தியாவின் இந்த செயல் ஐ.நா. பொதுசாசன மீறல்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை பதிலடி

விரைவில் இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை, ''பாகிஸ்தானின் மூத்த செயலரிடமிருந்து இப்படி ஓர் அசாதாரண கருத்து வந்திருக்கிறது. எங்களின் சுய விவகாரம் குறித்த விஷயத்தில் எந்த அபாய ரேகையும் இல்லை.

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த உண்மையும், ஊடுருவலும் நாட்டின் இதயப் பிரச்சனையாக இன்றுவரைக்கும் இருக்கிறது. இது இந்தியாவின் பார்வை மட்டுமல்ல. நீங்கள் மற்ற நாடுகளின் கருத்தையும் கேட்டறியலாம்.

இந்தியா, பலுசிஸ்தானின் வளர்ச்சி குறித்து அக்கறை கொண்டுள்ளது" என்று கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x