

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு மத்திய டெல்லியில் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைத்துள்ளது. ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட சொகுசு வீடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், கேஜ்ரிவால் அந்த வீட்டை நிராகரித்திருந்தார்.
டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் பதவியேற்றதற்குப் பின், பகவான் தாஸ் சாலையில் டியூப்ளக்ஸ் வகை சொகுசு வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால், எளிமையை முன்னிறுத்தி அரசியலுக்கு வந்த கேஜ்ரிவாலுக்கு சொகுசு வீடு ஒதுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய டெல்லியில் வேறு வீடு ஒதுக்கும் படி கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.
டெல்லி அரசு இது தொடர்பாக டெல்லி வீட்டுமனை இயக்குநரகத்துக்கு கோரிக்கை விடுத்தது. இதன் அடிப்படையில், திலக் லேன் பகுதியில் சி11/23 என்ற எண்ணில் தரைத்தள வீடு கேஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீடு மூன்று படுக்கையறைகள், ஒரு ஓவிய அறை, உணவறையைக் கொண்டது. பணியாளர்கள் தங்குவதற்கு இரு வீடுகள் உண்டு.
பாட்டியலா ஹவுஸ் நீதிமன்றத்தின் அருகே உள்ள இந்த வீடு மொத்தம் 1,600 சதுர அடிகள் கொண்டது. டெல்லி அரசுக்குச் சொந்தமாக டிடியு சாலை, ஷாம்நாத் சாலைப் பகுதிகளில் பங்களாக்கள் இருந்தாலும், தனது கோல் மார்க்கெட் தொகுதியை உள்ளடக்கிய மத்திய டெல்லியில் வீடு ஒதுக்க வேண்டும் என கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார்.
கேஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடு, பொதுப்பணித் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனி அதன் பராமரிப்பை பொதுப்பணித்துறை கவனித்துக் கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வசித்து வரும் 3, மோதிலால் நேரு பிளேஸ் பங்களாவை காலி செய்து தரும்படி அரசு கோரியுள்ளது. கடந்த 10 ஆம் தேதி இது தொடர்பான கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.