Last Updated : 22 Nov, 2013 08:45 AM

 

Published : 22 Nov 2013 08:45 AM
Last Updated : 22 Nov 2013 08:45 AM

பெங்களூர் ஏடிஎம் குற்றவாளி ஆந்திரத்தில் பதுங்கல்?

ஏடிஎம் மையத்தில் வங்கி ஊழியரை கொடூரமாக தாக்கி கொள்ளையடித்த மர்ம நபர் ஆந்திரத்தில் பதுங்கியிருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், வங்கி ஊழியரிடம் கொள்ளையடிக்கப்பட்ட செல்போனை பயன்படுத்திய ஆந்திர மாநிலம் இந்துப்பூரை சேர்ந்த வியாபாரியை போலீஸார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த செவ்வாய்கிழமை காலை 7.10 மணியளவில் பெங்களூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஜோதி உதய் (38) என்கிற வங்கி பெண் ஊழியர் கொடூரமாக தாக்கப்பட்டார். கத்தியாலும் துப்பாக்கியாலும் கொள்ளையன் அப்பெண்ணை தாக்கிய விடியோ காட்சிகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

துப்பு துலக்கிய செல்போன்

அந்தக் கொள்ளையனை பிடிப்பதற்காக பெங்களூர் போலீஸார் 8 தனிப்படைகளை அமைத்து விசாரித்து வருகின்றனர். தாக்குதலுக்குள்ளான பெண்ணிடம் இருந்து 3 ஏடிஎம் கார்டுகளையும் செல்போனையும் கொள்ளையன் திருடிச் சென்றுள்ளான்.

அந்த செல்போனின் ஐஎம்இஐ எண்ணையும் சிம்கார்ட் எண்ணையும் கொண்டு துப்பு துலக்கும் பணியில் போலீஸார் இறங்கினர்.

செல்போன் டவர் மூலம் சிம் கார்டை டிராக் செய்தனர். ஒருகட்டத்தில் செல்போன் அணைக்கப்பட்டதால் ஐஎம்இஐ எண் மூலமாக கண்காணிக்க தொடங்கினர். புதன்கிழமை முழுவதும் தொடர்ந்த கண்காணிப்பில் அந்த செல்போன் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் இந்துப்பூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

500 ரூபாய்க்கு விற்பனை

இந்துப்பூர் விரைந்த தனிப்படையினர், அந்த செல்போனை பயன்படுத்தி வருபவர் இந்துப்பூர் பஸ் நிலையத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் அபுசர் என தெரியவந்தது.

அபுசரை கைது செய்த போலீஸார், இந்துப்பூரில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது ''திருடன் யாரென்று தெரியாது.செவ்வாய்க்கிழமை இரவு கடைக்கு வந்து அந்த செல்போனை வைத்துக்கொண்டு 1000 ரூபாய் தருமாறு ஒருவர் கேட்டார். நான் 500 ரூபாய் தருவதாக கூறினேன். இதனால் பல இடங்களுக்கு சென்று விசாரித்துவிட்டு மீண்டும் என்னிடமே வந்து 500 ரூபாய்க்கு விற்றதாக தனிப்படையினரிடம் அபுசர் வாக்குமூலம் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா அவ்ரத்கரிடம் பேசியபோது, ''இந்துப்பூரில் குற்றவாளி செல்போனை விற்றிருப்பதால் அந்த வட்டாரத்திலே அவன் பதுங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஓரிரு நாள்களில் குற்றவாளியை கைது செய்து விடுவோம்''என்றார். குற்றவாளி குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீஸ் கமிஷனர் அறிவித்திருக்கிறார்.

தேறிவரும் ஜோதி

தலையின் வலது பக்கம் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு பெங்களூர் பிஜிஎல் மருத்துவமனையில் ஜோதிஉதய் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கணவர் உதய் கூறியது: கடந்த இரு நாள்களாக ஜோதி சுயநினைவின்றி இருந்தார்.

தற்போது தொடர் தீவிர சிகிச்சையின் காரணமாக மெல்ல மெல்ல தேறி வருகிறார். நினைவு திரும்பிவிட்டது. விரைவில் குணமடைவார் என நம்புகிறோம் என்றார்.

பெங்களூரில் பட்டப்பகலில் பெண் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பதால் கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் பெங்களூரில் இருக்கும் 2500 ஏடிஎம் மையங்களுக்கும் காவலர்களை நியமித்து, ஏடிஎம் மையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். ஆபத்து நேரத்தில் தகவல் தெரிவிக்கும் வகையில் ஏடிஎம் மையத்தில் அலாரம் பொருத்த வேண்டும் எனவும் வங்கிகளுக்கு அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x