சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானது அல்ல: பிரேத பரிசோதனைக்கு பிறகும் தொடர்கிறது மர்மம்
சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானது அல்ல எனக் கூறப்படுகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகும் அவரது மரணத்தில் மர்மம் தொடர்கிறது.
சுனந்தாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயஅறிவியல் துறை தலைவர் டாக்டர் சுதிர் குப்தா நிருபர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
சுனந்தாவின் திடீர் மரணம் இயற்கையானது அல்ல எனக் கருதப்பட்டதால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. முக்கிய உறுப்புகள் தீவிர ஆய்வுக்காக பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் இரு நாள்களில் வந்துவிடும். அவரது உடலில் சில காயங்கள் இருந்தன. அதன் காரணமும் பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் எனத் தெரிவித்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யில் மூன்று டாக்டர்கள் கொண்ட குழு சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தது. இந்த பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அமைச்சர் சசிதரூருக்கும் சுனந்தாவுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகளுக்கு குறைவாக இருப்பதால் பிரேத பரிசோதனை மாவட்ட நிர்வாகத்தின் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டின் கண்காணிப்பில் நடைபெற்றது.
இறுதிச் சடங்கு
பிரேத பரிசோதனைக்கு பின் சுனந்தாவின் உடல் லோதி ரோட்டில் உள்ள சசிதரூரின் அரசு வீட்டிற்கு மதியம் 3.30 மணிக்கு கொண்டுவரப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்திய பின் அருகிலுள்ள லோதி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
சுனந்தாவின் சிதைக்கு அவரது இரண்டாவது கணவரின் மகன் ஷிவ் மேனன் தீ மூட்டினார்.
சசி தரூரிடம் விசாரணை
டெல்லியின் ஐந்து நட்சத்திர ஓட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தங்கியிருந்த சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்தச் சம்பவம் குறித்து டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக அமைச்சர் சசிதரூரிடம் விசாரணை நடந்தது. அதை தொடர்ந்து ஓட்டல் பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சுனந்தா தங்கி இருந்த அறையில் தடயவியல் ஆய்வாளர்கள் விடியற்காலை மூன்று மணி வரை சோதனை நடத்தினர்.
சுனந்தா தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சுனந்தாவின் மொபைல், ஐபாட் மற்றும் லேப்-டாப் ஆகியவற்றை டெல்லி போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுனந்தாவை யாராவது வந்து சந்தித்தார்களா என ஓட்டலின் சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் வட்டாரத்தினர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: வெள்ளிக்கிழமை காலை சுனந்தா தனியாக ஓட்டலுக்கு வந்து அறை எடுத்தபோது வருத்தமான நிலையில் காணப்பட்டிருக்கிறார். அதன் பிறகுதான் சசிதரூர் வந்துள்ளார். முன்னதாக இருவருக்குள் நடந்த தொலைபேசி உரையாடல், பிபிஎம் வீடியோ சாட்டிங் மற்றும் எஸ்.எம்.எஸ். களையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். தெளிவான விவரம் தெரிந்த பிறகுதான் அதிகாரபூர்வமாக சொல்ல முடியும் என தெரிவித்தனர்.
சுனந்தாவின் இரண்டாவது கணவர் மூலம் பிறந்த மகன் ஷிவ் மேனன் (21) அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பினார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 52 வயது சுனந்தாவின் இறப்புக்கு இருநாள்களுக்கு முன்னதாக சசிதரூரின் ட்விட்டரில் அவருக்கும் பாகிஸ்தானிய பத்திரிகையாளரான மெஹர் தராருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட பேச்சுக்கள் வெளியாகின. அதை படித்த தரூரின் மனைவி சுனந்தா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
இதைத் தொடர்ந்து சசிதரூரும் சுனந்தா புஷ்கரும் இணைந்து தாங்கள் ஒற்றுமையாக வாழ்வதாக ட்விட்டர் வலைதளத்தில் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் அவரது மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
