Last Updated : 26 Feb, 2017 12:44 PM

 

Published : 26 Feb 2017 12:44 PM
Last Updated : 26 Feb 2017 12:44 PM

வணிக நலன்களுக்காக மருத்துவ முறைகேடு: கர்நாடகாவில் கருப்பையை இழந்து வரும் இளம் தாய்மார்கள்

கர்நாடக மாநிலம் கலாபுராகி மாவட்டத்தில் அதிக அளவில் தாய்மார்களுக்கு கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை நடத்தப்படுவதாக எழுந்த முறைகேட்டுப் புகார்களை அடுத்து 4 மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த 30 மாதக் காலக்கட்டத்தில் பெண்களின் கருப்பைகளை, குறிப்பாக ஏழை பெண்களின் கருப்பைகளை எந்த வித முறையான மருத்துவ காரணங்களுமின்றியே அகற்றியுள்ளது இந்த 4 மருத்துவமனைகள். முழுதும் வணிக நலன்களுக்காகவே இவ்வாறு செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து மாநில அரசு ஏ.ராமசந்திர பெய்ரி என்பவரது தலைமையில் அக்டோபர் 2015-ல் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்த விசாரணையில் காலாபுராகி மாவட்டத்தில் மட்டும் 30 மாதங்களில் 2,258 கருப்பைகள் அகற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த விசாரணையில் சிக்கிய 4 மருத்துவமனைகள் விவரம்: கிரிஷ் நூலா சர்ஜிக்கல் அண்ட் மேட்டர்னிட்டி ஹாஸ்பிடல், பசவ ஹாஸ்பிட்டல், எல்.எம்.கேர் ஹாஸ்பிட்டல், சுதா மெமோரியல் ஸ்ம்ருதி மேட்டர்னிட்டி சர்ஜிக்கல் நர்சிங் ஹோம் ஆகியவை மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணை முடிவுகளின் அடிப்படையில் உதவி ஆணையர் உஜ்வல் குமார் கோஷ் 4 மருத்துவமனைகளின் உரிமங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டார். டாக்டர் கிரிஷ் நூலா, ஸ்மிதா நூலா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, இந்த மருத்துவர்கள் இருவரும் சுமார் 600 கருப்பை அகற்ற அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனர். இவர்கள் மீது இன்னும் கே.எம்.சி. இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இளம் தாய்மார்கள் ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்துப் போயுள்ளனர். பிங்கு பாய் என்பவருக்கு 13 வயதில் திருமணம், 19 வயதில் இவருக்கு 3 குழந்தைகள். 24 வயதில் கருப்பை அகற்ற சிகிச்சை இவருக்கு செய்யப்பட்டது. “கருப்பை வீக்கம் இருப்பதால் பெரிய பிரச்சினைகள் ஏற்படும்” மருத்துவர் இவரை எச்சரித்துள்ளார். இவர் கடுமையான இடுப்பு வலிக்கும், உறுப்பிலிருந்து திரவ ஒழுக்கு ஏற்பட்டதாலும் மருத்துவ உதவி நாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மரணம் கூட ஏற்படலாம் என்ற எச்சரிக்கை இவரது காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்க நவம்பர் 2014-ல் இவர் கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டார். உறவினர்களிடமிருந்து ரூ.30,000 கடனுதவி பெற்று இவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இன்று கண்ணீரைத் துடைத்தபடியே பிங்கு பாய் கூறும்போது, “நான் இறந்து விட்டால் என் குழந்தைகளின் கதி என்னவாகும் என்ற பயத்தில் அறுவை சிகிச்சை செய்ய சம்மதித்தேன்” என்றார், ஆனால் உண்மையில் இவர் எதற்காக மருத்துவ உதவி நாடினாரோ அந்தப் பிரச்சினை தீரவில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கடும் முதுகுவலி, பலவீனம், நீண்ட களைப்பு, மார்பு வலி, மற்றும் பகுதியளவில் பார்வையும் பாதிக்கபட்டது.

லம்பானி மற்றும் கொல்லா ஆகிய சமூகத்தைச் சேர்ந்த இளம் தாய்மார்கள் அறுவைசிகிச்சைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். படிப்பறிவின்மை, ஏழ்மை, ஆகியவற்றுடன் விரைவில் பணம் கொழிக்கத் துடிக்கும் மருத்துவ உலகு இவர்களின் கருப்பை அகற்றத் துயரத்துக்குக் காரணமாகியுள்ளன என்று சுகாதார ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

ஆர்சிகெரே, கதூர் தாலுக்காக்கள், சித்ரதுர்கா, தாவண்கெரெ, துமாகுரு மாவட்டங்கள், ரெய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாய்மார்கள் ரத்தப்போக்கு, அடிவயிற்று வலி, சாதாரண சிறுநீர்ப்பாதை நோய்கள் ஆகியவற்றுக்காக மகப்பேறு மருத்துவர்களை நாடினர், ஆனால் முடிவில் கருப்பையை இழந்து வீடு திரும்பினர்.

கோலகுண்டா கொல்லாரஹத்தி என்ற ஊரைச் சேர்ந்த ஓங்காரம்ம என்ற 30 வயது பெண்மணி 4 ஆண்டுகளுக்கு முன்னால் கருப்பை அகற்றச் சிகிச்சை செய்து கொண்டார். வலியைப் போக்க இவர் எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தார். இதே நாளில் இதே கிராமத்தைச் சேர்ந்த 3 தாய்மார்களுக்கும் கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது, இதில் ஒருவர் 3 மாதங்களுக்கு முன்பாக இறந்து போனார்.

லலிதா பாயின் மருத்துவ அறிக்கை சிறுநீர்ப்பாதை நோய்க்கிருமியை மட்டுமே அடையாளம் காட்டியது. கலாபுராகியில் உள்ள நூலா மருத்துவமனை இவருக்கு கருப்பை அகற்றம் செய்ய வேண்டும் இல்லையேல் உயிருக்கு ஆபத்து என்று பயமுறுத்தியது. இவரிடம் பணமில்லாத போதும் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் ரூ.25,000 கட்டியபிறகே மருத்துவமனையிலிருந்து தன்னை அனுப்பியதாகக் கூறுகிறார் லலிதா பாய். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் இவரது சிற்நீர்பாதை கிருமி போகவில்லை, பிரச்சினை தொடர்கிறது.

சோனோகிராபி தவிர எந்த ஒரு முறையான மருத்துவ சோதனைகளும் இல்லாமல் எடுத்த எடுப்பில் கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாக விசாரணை அறிக்கை குற்றம்சாட்டியிருந்தது.

கர்நாடக ஜனரோக்யா சாலவலி குழு இந்த விவகாரத்தை 2015-ல் தன் கையில் எடுத்தது. இவர்கள் மேற்கொண்ட விசாரணயின் அடிப்படையில் மருத்துவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும், இவர்கள் மருத்துவப் பயிற்சி செய்யும் உரிமங்களை ரத்து செய்யவும் பரிந்துரை செய்தது. மேலும் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தது.

மேலும் தெரிந்த சாட்சியங்கள்:

இந்த அமைப்பு மேற்கொண்ட உண்மை அறியும் விசாரணையில் தேவையற்ற கருப்பை அகற்ற அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. கலாபுராகியில் உள்ள அம்பாலக குடியிருப்புப் பகுதியில் மட்டும் 55 வீடுகளைச் சேர்ந்த தாய்மார்களுக்கு 15 கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது. ஹசன் மாவட்ட அஜ்ஜனஹல்லியில் 13, வி.கே.சலாகர் தண்டாவில் 25, பெலாமகியில் 25 கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த நிலை? என்று எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான ரூபா ஹசன் கூறும்போது, “கொல்லாரஹத்தியில் மாதவிடாய் காலக்கட்டத்தில் வீட்டை விட்டு ஒதுங்கியிருக்கப் பணிகப்படும் தாய்மார்கள் மிகவும் மோசமான இடத்தில் அந்த நாட்களைக் கழிக்க நேரிடுகிறது, இந்தத் துயரத்தினால் அவர்கள் கருப்பையையே எடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர், இதனை வணிக நலன்களுக்காக மருத்துவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்பவர்கள், மகளிர் பாலியல் மற்றும் மகப்பேறு ஆரோக்கிய உரிமைகளை மீறுகின்றனர். நான் பேசிய வரையில் எந்த ஒரு தாய்மாருக்கும் இந்த அறுஐ சிகிச்சைக்கு முன்னால் பயாப்சி உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்படவில்லை” என்றார்.

மாநில சுகாதார துறை அமைத்த நிபுணர்கள் குழு இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், சிக்மகளூருவில் பணியாற்றும் அரசு மருத்துவர் டாக்டர் தயாநந்த் என்பவர் மட்டுமே தனியார் மருத்துவமனையில் 1,428 தேவையற்ற கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 40% தாய்மார்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல்களாகும்.

இந்தக் குற்றச்சாட்டுகளை சுதா மெமோரியல் மருத்துவமனை தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் மறுத்துள்ளது: “தேவையற்ற கருப்பை அகற்ற அறுவை சிகிச்சைகல் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக புற்று நோய் அபாயம் குறித்து கவலைப்பட்டவர்கள் தாங்களாகவே மனமுவந்து அறுவை சிகிச்சை செய்யுமாறு கோரினர். நாங்கள் அவர்கள் விருப்பத்தை ஏற்றதில்லை. ஆனால் அவர்கள் வற்புறுத்துவதால் நாங்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம்” என்று கூறியுள்ளது.

இம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சாம்பசிவராவ் மேலும் கூறும்போது, “நான் மிகுந்த காயமடைந்துள்ளேன். எங்களுடைய புகழுக்கு களங்கம் கற்பிக்கப்பட்டுள்ளது. 75 வயதில் எனக்கு இந்த களங்கம்தானா பரிசு? 48 ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறேன். நான் கோர்ட்டுகெல்லாம் செல்லப்போவதில்லை. 4 மாதங்கள் கொடுத்தால் நான் மருத்துவமனையை மூடிவிட்டு இந்த நகரத்தை விட்டே போய்விடுவேன்” என்றார்.

உரிமம் ரத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த டாக்டர் நூலா ஸ்மிதா, இந்தப் புகார்கள் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x