ஜல்லிக்கட்டு புதிய சட்டம்: ஜன.31-ல் அனைத்து தரப்பு மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றம் விசாரணை

ஜல்லிக்கட்டு புதிய சட்டம்: ஜன.31-ல் அனைத்து தரப்பு மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றம் விசாரணை
Updated on
3 min read

ஜல்லிக்கட்டு தொடர்பான புதிய சட்ட திருத்தம் தொடர்பான மத்திய அரசு, பிராணிகள் நல ஆர்வலர்கள் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் இம்மாதம் 31-ம் தேதி விசாரிக்கிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வழிவகுக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் மனுக்களை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ரோஹின்டன் எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய வனம் மற்றும் சுற்றச்சூழல் துறை பிறப்பித்த அறிவிக்கையை திரும்பப் பெறுவது தொடர்பான இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும், மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு தமிழக சட்டசபையில் புதிய சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதையும் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி வெள்ளிக்கிழமை சுட்டிக்காட்டினார்.

அப்போது, தமிழகத்தின் ஜல்லிக்கட்டு புதிய சட்டத்திருத்தத்துக்கு எதிரான இந்திய விலங்குகள் நல வாரியம், இதர விலங்குகள் நல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் மனுக்களுடன், அரசுகளின் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று ரோஹட்கியிடம் நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

மேலும், விலங்குகள் நல வாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்குகளுக்கு எதிரான தமிழக வழக்கறிஞர்களின் மனுக்களும் ஜனவரி 31-ம் தேதியன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பு வாதம்:

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, "ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டுவர மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் இருக்கிறது. மேலும், தற்போது கொண்டுவரப்பட்ட அவசர சட்டம் 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை தகர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுத்தப்படவில்லை. இந்த முடிவு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட்டது" என்றார்.

ஜல்லிக்கட்டு வழக்கின் பின்னணி:

மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு தமிழக சட்டசபையில் புதிய சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய வனம் மற்றும் சுற்றச்சூழல் துறை பிறப்பித்த அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பாக இந்திய விலங்குகள் நல அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மற்றும் வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆகியோர், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டமானது விலங்குகள் வதையை தடுக்கும் சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி, 'மத்திய அரசின் அறிவிக்கையை வாபஸ் பெறுவதற்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று தெரிவித்தார்.

இதனிடையெ, தமிழக அரசு உள்ளிட்ட 70 பிரதிநிதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 'கேவியட்' மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டை எதிர்க்கும மனு:

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவில், 'விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தமிழக அரசு கடந்த 23-ம் தேதி சட்டம் நிறைவேற்றியுள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றும் வகையில் சந்தேகத்துக்குரிய வகையில் இச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாடு பிடித்தல், மாட்டுப்பந்தயம், ஜல்லிக்கட்டு மற்றும் மாடுகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் வேறு எந்த நிகழ்வுகளும் கொடுமைப் படுத்தும் செயல் என்று இந்த நீதி மன்றம் கடந்த 12.1.2016ல் தீர்ப் பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராகவும், இந்திய அரசியல மைப்பு மற்றும் மிருகவதை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கு எதிராகவும் தமிழக அரசின் சட்டம் உள்ளது. இச்சட்டப் பிரிவு 38-ன் கீழ் மத்திய அரசுக்கு மட்டுமே விதிகளை வகுக்க அதி காரம் உள்ளது. எனவே, தமிழக அரசு பிரிவு 3(2)ன் கீழ் விதிகளை வகுத்துள்ளது செல்லாது.

ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றும் வகையில் சட்டத்தை இயற்றுவது மோசடிக்கு சமம் என்று சில வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. காளை களுக்கு வழங்கப்பட்டிருந்த பாது காப்பை தமிழக அரசு புதிய சட்டத்தின் மூலம் மாற்றியுள்ளது. கண்டிப்பான விதிகள், கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், காளைகளை பயன்படுத்தும் நிகழ்ச்சிகள் கொடுமைப்படுத்தும் செயல்தான் என்று ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் விதிமுறைகள் ஏற்கனவே நீதிமன்றத்தால் கண்டறியப்பட்ட குறைகளை தீர்க்கும் வகையில் இல்லை. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ளதன் மூலம், மிருக வதை தடுப்புச் சட்ட விதிகளுடன் முரண்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. கலாச்சார மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படுவதால், இதற்கு மத ரீதியான எந்த தொடர்பும் இல்லை என்று ஏற்கெனவே தீர்ப் பளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு காளைகளை பாதுகாக்க நடத்தப்படும் நிகழ்வு என்ற காரணம் சட்டப்படி ஏற்புடையதல்ல.

ஒரு பிராணியை சண்டையிட தூண்டுவது சட்டப்பிரிவு 11(1) மற்றும் (என்) பிரிவுகளின் கீழ் குற்றம். எனவே, பல வழிகளில் மத்திய சட்டத்தை தமிழக சட்ட திருத்தம் மீறுகிறது. மேலும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசின் கடமை. வன்முறையான ஜல்லிக்கட்டு நிகழ்வில் பயிற்சி பெறாத இளைஞர்கள், மக்கள் கூட்டத்தால் அச்சுறுத்தப்பட்ட காளைகளுடன் சண்டையிட வற்புறுத்தப்படுகிறார்கள். எனவே, தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in