

சிறுமி ஆருஷி மற்றும் வீட்டுப் பணியாளர் ஹேமராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் ஆகியோர், தாங்கள் குற்றம் செய்யவில்லை என்றும், நீதிக்கானப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆருஷி கொலை வழக்கில், அவரது பெற்றோரும் மருத்துவத் தம்பதிகளுமான டாக்டர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார் ஆகியோர் குற்றவாளிகள் என காஜியாபாத்தின் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அதேபோல், ஹேமராஜ் கொலையிலும் இவர்களே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, போலீஸாரால் கைது செய்யப்பட்ட ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் ஆகியோர் காஜியாபாத்திலுள்ள தாஸ்னா சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இதனிடையே, தீர்ப்பு வெளியானவுடன் ஆருஷியின் பெற்றோர் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அதில், "நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நாங்கள் செய்யாதக் குற்றத்துக்கு குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது காயத்தையும் கவலையையும் அளிக்கிறது. நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை மறுக்கிறோம். நீதிக்கான எங்களது போராட்டம் தொடரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.