

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பல்வேறு கேள்விகளுக்கு துறைசார் அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கம்:
பாகிஸ்தான் தூண்டுதல்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பாதுகாப்புப் படையினர் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். துப்பாக்கிச் சூடு நடக்கும் இடத்தில் திடீரென கூடும் சில இளைஞர்கள், அங்குள்ள பாதுகாப்புப் படையினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடுகின்றனர். அப்போது பாதுகாப்புப் படையினரின் கவனம் திசை திரும்பும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கிருக்கும் தீவிரவாதிகள் தப்பிச் சென்று விடுகின்றனர். காஷ்மீர் இளைஞர்களை இத்தகைய செயல்களில் ஈடுபடுமாறு பாகிஸ்தான் தான் தூண்டி வருகிறது. இதற்காக பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி வருகிறது.
ரேபிஸுக்கு 324 பேர் பலி
மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஜே.பி.நட்டா: கடந்த 2014 முதல் இதுவரை ரேபிஸ் நோய்க்கு 324 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 2016-ல் 47 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக கர்நாடகாவில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யும் மாநிலங்களுக்கு தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஆதரவு அளிக்கப்படும். எனினும் சுகாதாரம் என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், தடுப்பூசி கொள்முதல் விவகாரங்களை அந்தந்த மாநில அரசுகள் தான் மேற்கொள்ள வேண்டும்.