Published : 28 Jul 2016 01:28 PM
Last Updated : 28 Jul 2016 01:28 PM

"அநீதியை தட்டி கேட்பதற்கு மனிதாபிமானமே போதும்": விதவை தலித் பெண்ணை மீண்டும் பணியமர்த்திய மாவட்ட ஆட்சியர்

பிஹாரில், தலித் என்பதாலும் விதவை என்பதாலும் நீக்கப்பட்ட சமையல் பணியாளரை மீண்டும் பணியமர்த்தி நீதியின் மாண்பை உணர்த்தியிருக்கிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர்.

பாட்னாவை சேர்ந்த ஊர்மிளா தேவி(36). இளம் விதவைப் பெண். தலித் என்பது இவர் மீதான அடக்குமுறையின் அளவை இன்னும் கூட்டியிருந்தது. அதன் விளைவாக அவர் பார்த்துவந்த சமையல் வேலை பறிக்கப்பட்டு உயர் சாதி ஆண் ஒருவருக்கு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கன்வால் தனுஜை சந்தித்து கடந்த திங்கட் கிழமை அவர் அளித்த புகார் அவரது வாழ்கையையே மாற்றியுள்ளது.

நடந்தது என்ன?

பிஹார் தலைநகர் பாட்னாவின் அருகே அமைந்துள்ளது அவ்ரங்கபாத். அங்கு தன் கணவருடன் வசித்து வந்துள்ளார் ஊர்மிளா தேவி. இவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர். ஊர்மிளாவின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். கணவரின் இறப்பு, குடும்ப வறுமை காரணமாக ஊர்மிளா வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பல போராட்டங்களுக்குப் பின்பு பிஹாரில் ஒரு அரசுப் பள்ளியில் ஊர்மிளாவுக்கு சத்துவுணவுக் கூடத்தில் வேலை கிடைத்துள்ளது.

ஆனால் அந்த வேலை ஊர்மிளாவிற்கு மேலும் மனக் கஷ்டத்தை உருவாக்கியுள்ளது. காரணம் ஊர்மிளா தலித் சமூகத்தை சேர்ந்த விதவைப் பெண் என்று தெரிந்ததும் அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஊர்மிளாவை குழந்தைகளுக்கு மதிய உணவை சமைக்க அனுமதிக்க மறுத்ததுடன் அவரை வேலையிலிருந்தும் நீக்கினார்.

கடந்த இருவருடங்களாக ஊர்மிளா பல்வேறு பள்ளிக்கூடங்களில் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால், அனைத்து பள்ளிக்கூடங்களும் மேற்கண்ட காரணத்தைக் கூறி அவரை நிராகரித்துள்ளனர்.

இதனையடுத்து, குழந்தையுடன் தனியாகத் தவித்து வந்த ஊர்மிளா பாட்னா மாவட்ட ஆட்சியரை கடந்த திங்கட்கிழமை அணுகி புகார் கொடுத்தார்.

ஊர்மிளாவின் புகாரைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் கன்வால் தனுஜ், ஊர்மிளாவுக்கு அவரது பணி திரும்ப கிடைக்கும் என நம்பிக்கையளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஊர்மிளாவை மீண்டும் பணியமர்த்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேற்று (புதன்கிழமை) சென்ற கன்வால் தனுஜ், அப்பள்ளியின் தலைமையாசிரியரை சந்தித்து ஊர்மிளா தொடர்பான பல கேள்விகளை கேட்டுள்ளார். ஆனால், அந்த தலைமை ஆசிரியரிடம் எந்த கேள்விக்கும் சரிவர பதிலளிக்காததால் அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

மேலும் ஊர்மிளவால் சமைக்கப்பட்ட மதிய உணவை அப்பள்ளி குழந்தைகளுடனும் கல்வித்துறை அதிகாரிகளுடனும் ஒன்றாக அமர்ந்து ருசித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுடன் உணவுண்ணும் கன்வால் தனுஜ்

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் கன்வால் தனுஜ் கூறியதாவது, “அநீதியை தட்டி கேட்பதற்கு மனிதாபிமானமே போதும். மனிதாபிமானம் உள்ள அனைத்து மனிதரும் இவ்வுதவியை செய்வர். என் ஆழ்மனது என்ன கூறியதோ அதனையே நான் செய்தேன்” என்றார்.

தனுஜ் கன்வாலின் இந்த மனிதாபிமான நடவடிக்கையால் தனது வேலையை திரும்பப் பெற்றுள்ளார் ஊர்மிளா தேவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x