

ஹரியாணாவில் இடஒதுக்கீடு கோரி ஜாட் இன மக்கள் மீண்டும் போராட்டம் தொடங்கி உள்ளனர். இதனால் மாநிலம் முழுவதிலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களை சேர்த்து அரசு வேலை, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க கோரி ஜாட் இனமக்கள் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 30 பேர் பலியாயினர்.
அதன்பின் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், புதிய சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த ஜாட் இன மக்கள் நேற்று மீண்டும் போராட்டம் தொடங்கினர். மேலும் 15 நாட்களுக்குள் இடஒதுக்கீடு வழங்க ஹரியாணா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கெடு விதித்துள்ளனர்.
ஹிசார், பிவானி, ரோத்தக், ஜிந்த், பானிபட் உட்பட 9 மாவட்டங் களில் உள்ள கிராமங்களில் போராட்டம் நடைபெறுகிறது. சோனிபட் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதள சேவையும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அசம்பாவிதங் களை தடுக்க மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட் டுள்ளது. பதற்றம் நிறைந்த 9 மாவட்டங்களில் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநில கூடுதல் தலைமை செயலர் (உள்துறை) ராம் நிவாஸ் கூறும்போது, ‘’போராட்டத்தை சமாளிக்க 55 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.