

உலக வேலைவாய்ப்பு சந்தையை கைப்பற்றும் வகையில் சீனா மிகப் பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்று குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறினார்.
குஜராத் மாநிலம், காந்தி நகரில், மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் இளைஞர்களுக்கான பல்வேறு திறன் வளர்ப்பு திட்டங்களை மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், “உலக வேலைவாய்ப்பு சந்தையை கைப்பற்றும் வகையில் சீனா மிகப் பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் நம் நாட்டு இளைஞர்களை இதில் காண முடியவில்லை. நமது இளைஞர்களும் இந்த வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் நாம் யுக்திகளை வகுக்க வேண்டும்” என்றார்.
அருணாசலப்பிரதேசத்தில் நரேந்திர மோடி சனிக்கிழமை பேசுகையில் மத்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கையை விமர்சித்தார். அப்போது, “எல்லையை விரிவுபடுத்தும் மனப்பான்மையை சீனா கைவிடவேண்டும். பூமியில் எந்த சக்தியாலும் இந்தியாவிடமிருந்து அருணாசலப்பிரதேசத்தை பறிக்க முடியாது” என்று கூறியிருந்தார்.
காந்தி நகர் விழாவில் மோடி மேலும் பேசுகையில், “கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் இதற்காக ரூ.1000 கோடி செலவிடப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் இதுவரை 18 ஆயிரம் இளைஞர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வரும் மக்களவை தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வருமானால் இளைஞர்களுக்காக புதிய கொள்கை வகுக்கப்படும். இளைஞர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் குஜராத்தில் செயல்படுத்தப் பட்டுள்ளது போல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
திறன் வளர்ப்புத் திட்டங்களுக்காக குஜராத் அரசை மத்திய அரசு பாராட்டி விருது வழங்கியுள்ளது. இதில் குஜராத் காட்டியுள்ள வழியை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்” என்றார்.
“மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன. வாக்குறுதிகளை நிறைவேற்றாதற்கு மத்திய அரசு இதை ஒரு காரணமாக சொல்லக்கூடும்” என்றார் மோடி.