Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM

ஜாமீன் மறுக்கப்பட்ட தெஹல்கா ஆசிரியர் தேஜ்பால் கைது

பாலியல் புகாரில் சிக்கியுள்ள தெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பாலின் முன்ஜாமீன் மனுவை கோவா நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

நட்சத்திர ஓட்டலின் சிசிடிவி கேமராவில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 7, 8-ம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தேஜ்பால், சக பெண் நிருபரை பாலியல்ரீதியாக துன்புறுத்திய தாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோவா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக தலைமறைவாக இருந்த தேஜ்பால் வெள்ளிக் கிழமை கோவா போலீஸார் முன்னி லையில் ஆஜரானார்.

முன்னதாக பனாஜி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் தேஜ் பால் சார்பில் வெள்ளிக்கிழமை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டது. அதனை விசாரித்த நீதிபதி அனுஜா பிரபுதேசாய், சனிக்கிழமை காலை 10 மணி வரை தேஜ்பாலை கைது செய்ய தடை விதித்தார். இந்நிலையில் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை சனிக்கிழமை காலை நடைபெற்றது. தேஜ்பால் சார்பில் வழக்கறிஞர் கீதா லூத்ரா ஆஜரானார்.

கோவா போலீஸாரின் வழக்கு விசாரணைக்கு தேஜ்பால் முழு ஒத்துழைப்பு அளிப்பார். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும்வரை அவர் கோவாவில் தொடர்ந்து தங்கியிருப்பார்.

பாலியல் புகார் தெரிவித்த பெண் நிருபர் தங்கியிருக்கும் மும்பைக்கு செல்ல மாட்டார். தனது பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக உள்ளார். தேவையானால் அவரது வங்கிக் கணக்குகளையும் முடக்கி வைத்துக் கொள்ளலாம் என்று கீதா லூத்ரா கேட்டுக் கொண்டார்.

தேஜ்பால் பச்சோந்தி

கோவா போலீஸ் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சரேஷ் லோதிகர் ஆஜரானார்.

தருண் தேஜ்பால் ஒரு பச்சோந்தி. அவர் நேரத்துக்கு நேரம் நிறம் மாறுவார். அவர் எந்த அளவுக்கு போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

கைது நடவடிக்கையை தவிர்க்க அவர் தலைமறைவாகி விட்டார். அவரைக் கைது செய்து விசாரித்தால்தான் உண்மை கள் வெளிவரும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பல்வேறு விதங்களில் நெருக் கடிகள் அளிக்கப்பட்டு வரு கின்றன. சம்பவம் நடைபெற்ற ஓட்டலின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் தேஜ்பாலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இருப்பது தெரிய வந்துள்ளது. தேஜ்பால் வெளியே நடமாடினால் சாட்சிகளை கலைக்கும் ஆபத்து உள்ளது என்று அரசு வழக்கறிஞர் வாதாடினார்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விவாதம் நடைபெற்றது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அனுஜா பிரபு தேசாய் தனது முடிவை மாலையில் அறிவிப்பதாகக் கூறி விசார ணையை ஒத்திவைத்தார்.

இதை தொடர்ந்து மாலையில் மனுவை மீண்டும் விசாரித்த நீதிபதி, தேஜ்பாலின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். காலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தேஜ்பால், அவரது மனைவி, மகள் ஆகியோரும் நீதிமன்றத்தில் இருந்தனர். மாலையில் நீதிபதி முடிவை அறிவித்தபோது தேஜ்பால் நீதிமன்றத்தில் இல்லை.

இதனிடையே மாலை 5 மணி அளவில் கோவா குற்றப் பிரிவு போலீஸ் அலுவலகத்தில் அவர் ஆஜரானார். தேஜ்பாலின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து சுனிதா சாவந்த் தலைமையிலான போலீஸார், அவரைக் கைது செய்தனர். -பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x